ஷா ஆலாம், நவ. 12 – சிலாங்கூர் அரசின் வலுவான நிதி கையிருப்பு, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்கள் மற்றும் நெருக்கடியான காலகட்டங்களில் ஏற்படும் நிதிச் சுமைகளைச் சமாளிக்க உதவுவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாநில அரசு குறைந்தபட்சம் RM163 மில்லியனைச் செலவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
2018-ஆம் ஆண்டில் RM2.1 பில்லியனாக இருந்த மாநிலத்தின் நிதி கையிருப்பு, 2021-ஆம் ஆண்டில் RM3 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்திருந்ததே பேரிடர் காலத்தில் போதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு உதவியதாக அவர் விளக்கினார்.
இதற்கிடையில், நடப்பு ஆண்டுக்கான RM2.8 பில்லியன் வருவாய் இலக்கையும் சிலாங்கூர் மாநிலம் கடந்துள்ளதாக அமிருடின் தெரிவித்தார். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தின் மொத்த வருவாய் RM2.82 பில்லியனை எட்டியுள்ளதுடன், டிசம்பர் மாதத்திற்குள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றான நில ஒதுக்கீட்டுக் கட்டணங்கள் (Land Premium), 2026-ஆம் ஆண்டுக்கான மொத்த வருவாய் இலக்கில் RM1.02 பில்லியனைப் பங்களிக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இது மொத்த வருவாய் இலக்கில் 36.3 விழுக்காடாகும்.
2027-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டம் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளதை முன்னிட்டு மீடியா சிலாங்கூர் நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அமிருடின் இதனைத் தெரிவித்தார்.
மாநிலத்தின் நிதி நிலையை வலுப்படுத்தி, பேரிடர் நிவாரணம், பொருளாதார மேம்பாடு மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.







