பாராங் கத்தியால் தாக்கப்பட்டதில் போலீஸ் அதிகாரியின் மணிக்கட்டு துண்டிப்பு; சந்தேக நபர் சுட்டுக்கொலை

12 நவம்பர் 2026, 4:58 AM
பாராங் கத்தியால் தாக்கப்பட்டதில் போலீஸ் அதிகாரியின் மணிக்கட்டு துண்டிப்பு; சந்தேக நபர் சுட்டுக்கொலை

கோலாலம்பூர், நவ. 12 – கெப்போங், டேசா அமான்பூரி பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் நடத்திய பாராங் கத்தி தாக்குதலில் 26 வயதுடைய போலீஸ் அதிகாரியின் வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்டதுடன், தலை மற்றும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.

நேற்று மாலை சுமார் 4 மணியளவில் குடியிருப்பு ஒன்றில் நபர் ஒருவர் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வீட்டின் கதவு திறக்கப்பட்டபோது, உள்ளே இருந்த சந்தேக நபர் இரண்டு பாராங் கத்திகளைப் பயன்படுத்தி போலீசாரைத் தாக்கியுள்ளார்.

அதில் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ரோந்து பிரிவைச் சேர்ந்த அதிகாரி படுகாயமடைந்தார். மேலும், தீயணைப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சிலரும் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

பின்னர் தப்பியோடிய சந்தேக நபர், இரவு சுமார் 8 மணியளவில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைக் கைது செய்ய முயன்றபோது மீண்டும் பாராங் கத்தியால் தாக்க முற்பட்டதால், தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் காயமடைந்த சந்தேக நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக ஷசெலி உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், காயமடைந்த போலீஸ் அதிகாரி முதலில் செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அறுவைச் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் சீரான நிலையில் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.