ஷா ஆலாம், நவ. 12 – கம்போங் மெலாயு சுபாங் தம்பஹான், செக்ஷன் U5, பெர்சியாரான் கோஸ்மோஸ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, எட்டு வீடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அவ்விடம் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டதால் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோத்தா டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் இஸ்வான் காசிம் தெரிவித்தார்.

இதற்கிடையில், வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், தற்காலிக வீடுகளுக்கான வாடகைச் செலவுகளை மாநில அரசு ஏற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நிலச்சரிவால் சேதமடைந்த தடுப்புச்சுவர் மற்றும் மலைச்சரிவைப் புனரமைப்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்த உதவி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் நிலை மற்றும் சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளின் அறிக்கைகளுக்காகத் தமது தரப்பு காத்திருப்பதாகவும், அவை கிடைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று காலை சுமார் 7 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியிலிருந்த கான்கிரீட் தடுப்புச்சுவர் சேதமடைந்தது.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று காலை 9.55 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் தெரிவித்தார்.
தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் பாதுகாப்பு நிலை தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசுடன் இணைந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தமது தரப்பு தயாராக இருப்பதாக இஸ்வான் மேலும் தெரிவித்தார்.







