ஷா ஆலாம், நவ 11 : ஷா ஆலாம், செக்க்ஷன் U5 , பெர்சியாரான் கோஸ்மோஸ் (Persiaran Kosmos) குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, கான்கிரீட் தடுப்புச் சுவர் சேதமடைந்தது.
காலை 9.55 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
"சுங்கை புலோ தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் காலை 10.12 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று, அந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டதை உறுதிப்படுத்தினர்.
அச்சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. அப்பகுதி பாதுகாப்பாக இருப்பதையும், பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை பகிர்ந்துள்ள புகைப்படங்கள், கான்கிரீட் தடுப்புச் சுவரின் பல பகுதிகள் நகர்ந்து, சாய்ந்திருப்பதையும், கட்டுமான கற்கள் சரிந்து விழுந்துள்ளதையும் காட்டுகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி இடிபாடுகளும் உடைந்த கான்கிரீட் கற்களும் சிதறிக்கிடப்பதைக் காண முடிகிறது,
அதே நேரத்தில் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி அதன் அசல் நிலையிலிருந்து மாறியுள்ளது.
இந்த சம்பவம் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ஷா ஆலாம் மாநகராட்சி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அஷ்ருல் தெரிவித்தார்.








