ஷா ஆலாம், நவ 10 : பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தொடக்க மற்றும் இறுதி இலக்குகளுக்கான இணைப்புச் சேவைகளை (first- and last-mile connectivity) மேம்படுத்துவதில் சிலாங்கூர் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது .
2027-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவிருப்பதை முன்னிட்டு வழங்கிய சிறப்பு நேர்காணலில், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்களில் ஒன்று மக்கள் தங்களின் அலுவலகம் அல்லது வீட்டில் இருந்து நிலையங்களை அடைவதும், அங்கிருந்து தங்களின் இறுதி இலக்கைச் சென்றடைவதுமே ஆகும் என்று குறிப்பிட்டார்.
சுமார் 200 முதல் 500 மீட்டர் வரையிலான குறுகிய தூரமாக இருந்தாலும், மலேசியாவின் வெப்பமான காலநிலை மற்றும் நிலப்பரப்பு காரணமாக மக்கள் நடந்து செல்வது கடினமாக உள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.
பெரிய அளவிலான போக்குவரத்து வசதிகள் கட்டப்பட்டு வந்தாலும், இந்த இறுதி இலக்கு இணைப்புச் சேவைகள் திட்டமிடலில் சரியாகச் சேர்க்கப்படாதது ஒரு பலவீனமாகும்.
எனவே, 2027-ஆம் ஆண்டில் இதற்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநில அரசு ஏற்கனவே 'ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ்' (Smart Selangor Bus) மற்றும் தேவைக்கேற்ற வேன் போக்குவரத்து (DRT) சேவைகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அவற்றின் செயல்திறன் இன்னும் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை .
எனவே, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வர்த்தக வளாகங்கள் வழியாக எல்ஆர்டி (LRT) நிலையங்களை மக்கள் எளிதாகச் சென்றடையும் வகையில் இந்தச் சேவைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்று மந்திரி பெசார் கூறினார்.
இதற்கு முன்னதாக, எல்ஆர்டி மற்றும் எம்ஆர்டி (MRT) நிலையங்களைச் சுற்றியுள்ள பாதசாரிகளின் வழித்தடங்களைக் கண்டறிந்து உடனடியாக மேம்படுத்துவதற்காகத் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ங் ஸீ ஹான் தெரிவித்திருந்தார் .
மேலும், பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்க, சிலாங்கூர் அரசாங்கம் கடந்த ஜூன் முதலாம் தேதி, தகுதியுடைய 50,000 விண்ணப்பதாரர்களுக்கு 2026 டிசம்பர் வரை ஆறு மாத காலத்திற்கு 30 ரிங்கிட் மாதாந்திர கட்டண ஊக்குவிப்புத் தொகையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.









