ஷா ஆலாம், அக் 30 - ரயில்களில் ஏற்படும் அதிக நெரிசல் குறித்த புகார்களை ஆராய்ந்து, அதற்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ரேபிட் கேஎல் நிறுவனம், போக்குவரத்து அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஆகிய தரப்புகளை உத்தரவிட்டுள்ளார்.
@siti.anisahj என்ற பயனர் திரெட்ஸ் (Threads) தளத்தில் பதிவிட்ட கோரிக்கைக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அந்தப் பயனர் தனது பதிவில், ரயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்குமாறு கோரியிருந்தார்.
" @anwaribrahim_my. தயவுசெய்து எங்களுக்குக் கூடுதல் ரயில் பெட்டிகளை வழங்க முடியுமா? ஒவ்வொரு நாளும் இதே நிலைதான் நீடிக்கிறது, சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல், ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது," என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அன்வார், இந்த விவகாரத்தைக் கவனித்து உடனடியாகத் தீர்வு காணுமாறு ரேபிட் கேஎல், போக்குவரத்து அமைச்சு மற்றும் லோக் ஆகியோரைக் கேட்டுக்கொண்டார்.
" இந்தச் சிக்கலைக் கவனித்து, உடனடியாகத் தீர்வுகாணுமாறு @myrapidkl, @ministryoftransportmy மற்றும் @lokesiewfook ஆகியோரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன, மேலும் இது நிச்சயமாக மக்களின் அன்றாடப் பணிகளைப் பாதிக்கின்றது.
நாம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று பிரதமர் அன்வார் தனது திரெட்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.







