கிளேபாங், நவ 10: வெறுப்பு அரசியல் கலாச்சாரம், எதிர்த்தரப்பினர் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் போன்ற காரணங்களால் நாட்டின் அரசியல் முன்னேற்றங்கள் மீது இளைஞர்களில் ஒரு பகுதியினர் பெரும் சலிப்பை அடைந்துள்ளனர் .
அரசியல் போட்டி என்பது மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளை விவாதிப்பதை விட்டுவிட்டு, தனிநபர்களின் பிரபலத்தை அதிகரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவதாக மலேசிய இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் டேனியல் ஹெர்மி தெரிவித்துள்ளார் .

தேர்தல் காலத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் செயல்களாக மாறாதபோது அனைத்து அரசியல்வாதிகளும் ஒருவரே என்ற எண்ணம் ஏற்படுவதாகவும், சுய விளம்பரத்திற்காக சமூக ஊடகங்களில் செய்யப்படும் பதிவுகள் இளைஞர்களிடையே சலிப்பை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார் .
எனவே, இளைஞர்கள் தற்போதைய சர்ச்சைகளால் மட்டும் ஈர்க்கப்படாமல், கொள்கைகளைச் சரியாக மதிப்பிட தேர்தல் ஆணையம் போன்ற நடுநிலையான அமைப்புகள் மூலம் அரசியல் விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் .
இதேபோன்ற கவலையைப் பகிர்ந்துகொண்ட ஈல்டா நூர் ஆண்ட்ரியானா என்ற இளைஞர், தேர்தல் காலத்தில் ஒருவரை ஒருவர் அவதூறு பரப்புவதையும், உணர்ச்சிகளைத் தூண்டுவதையும் இளைஞர்கள் விரும்புவதில்லை என்றும், இன்னும் முதிர்ச்சியான அரசியல் போட்டியையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 15-வது பொதுத்தேர்தலின் போது, மலேசிய தொடர்பு-பல்லூடக ஆணையம், 101 தூண்டல் பதிவுகள் நீக்கப்பட்டதோடு, 2022 முதல் ஏப்ரல் 2026 வரை இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 8,540 உள்ளடக்கங்கள் சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்கியது.
மற்றொரு இளைஞரான அஹ்மாட் ஹசான் , இளைஞர்களை வெறும் வாக்காளர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் .

தொழில்நுட்பத்தை விரும்பும் இன்றைய தலைமுறையினர் அரசு நிர்வாக நடைமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு மற்றும் சிறந்த ஊதியம் போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார் .
தற்போது 18 வயது பூர்த்தியடைந்தவுடன் இயல்பாகவே வாக்காளராக பதியும் முறை அமலில் உள்ள நிலையில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர் வாக்காளர்களின் எண்ணிக்கை 60 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது .







