ஷா ஆலாம், நவ 8 : தீபாவளிப் பண்டிகை என்பது இந்துக்களுக்கான ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல, சிலாங்கூர் மாநிலத்தில் வாழும் பல்லின மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ஒரு சிறந்த தளமாகத் திகழ்கிறது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
இந்த ஒளித் திருவிழா , ஒருவரையொருவர் மதித்து, கலாச்சாரப் பன்முகத்தன்மையைக் கொண்டாடி வாழும் ஒரு பல்லினச் சமூகத்தின் வலிமையைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
இன்றைய தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“சிலாங்கூர் மக்களைப் பொறுத்தவரை, தீபாவளி என்பது நமது பல்லினச் சமூகத்தின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கூட்டு மனப்பான்மையை மேலும் ஆழமாக்கும் ஒரு கொண்டாட்டமாகும்.”
தீபாவளித் திருநாள் இருளை நீக்கி ஒளியையும், தீமையை அழித்து நன்மையையும் வெற்றியைக் குறிக்கும் மறைமுக அர்த்தத்தையும் கொண்டு வருகிறது. அதோடு, மக்கள் தங்களது வாழ்வில் சிறந்த மாற்றங்களை மேற்கொண்டு வாழ்வில் முன்னேறவும் அழைப்பு விடுக்கின்றது என அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம், இம்மாநிலத்திலுள்ள இந்தியச் சமூகத்தின் நலனில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களையும், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
“இந்த ஒளியின் திருவிழா உங்கள் அனைவரது வாழ்விலும் வலிமை, நல்வாழ்வு மற்றும் அன்பைக் கொண்டு வரட்டும்,” என்று அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

தீபாவளித் திருநாளான இன்று, இந்து சமூகத்தினர் பாரம்பரிய முறைப்படி வீடுகளில் அழகான கோலங்கள் இட்டும், விளக்குகள் ஏற்றியும், சிறப்பு வழிபாடுகள் நடத்தியும், தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறியும் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) கிள்ளானில் உள்ள கிள்ளான் சதுக்கம் அல்லது படாங் செட்டி (Padang Chetty) மைதானத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாலை 6.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைபெறவுள்ள அக்கொண்டாட்டம், "ஒற்றுமையின் ஒளி, வளமான சிலாங்கூர்" என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது.
பல்லின கலாச்சாரங்களைக் கொண்டாடுவதற்கும் மக்களிடையேயான உறவை வலுப்படுத்துவதற்கும் இந்த மாநில அளவிலான விழாவில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.







