சுபாங் வெள்ளக் கழிவுகள்: 73 மெட்ரிக் டன் அகற்றம்

7 நவம்பர் 2026, 10:36 AM
சுபாங் வெள்ளக் கழிவுகள்: 73 மெட்ரிக் டன் அகற்றம்
சுபாங் வெள்ளக் கழிவுகள்: 73 மெட்ரிக் டன் அகற்றம்
சுபாங் வெள்ளக் கழிவுகள்: 73 மெட்ரிக் டன் அகற்றம்

ஷா ஆலாம், நவ 7 : சிலாங்கூரில் அண்மையில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கம்புங் மெலாயு சுபாங் உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவு பணிகளின் மூலம் மொத்தம் 73 மெட்ரிக் டன் வெள்ளக் கழிவுகள் அகற்றப்பட்டன.

இன்றுடன் ஐந்தாவது நாளாக நீடித்த அந்த ஒருங்கிணைந்த துப்புரவுப் பணிகள் கம்புங் குபு காஜா, மெர்பாவ் செம்பாக் மற்றும் காம்புங் பாயா ஜாராஸ் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது என கே.டி.இ.பி வேஸ்ட் மேனேஜ்மென்ட் (KDEBWM) திடக்கழிவு நிர்வகிப்பு நிறுவனம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட இடங்கள் மீண்டும் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், குடியிருப்பாளர்கள் வாழ்வதற்கு வசதியாகவும் மாறுவதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த வேலைகள் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தத் துப்புரவுப் பணிக்காக 39 ரோ-ரோ (RoRo) குப்பைத் தொட்டிகள் மற்றும் 16CY கொள்ளளவு கொண்ட இரு கூடுதல் RoRo தொட்டிகள் பயன்படுத்தப்பட்டதுடன், 60 பணியாளர்களும் களமிறக்கப்பட்டனர்.

மேலும், களத்தில் தூய்மைப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஷா ஆலாம் மாநகர் மன்றம் (MBSA) இரு கூடுதல் RoRo லாரிகளை வழங்கி இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்தது.

உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து சொத்துக்கள், இயந்திரங்கள் மற்றும் மனிதவளத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதிசெய்ய KDEBWM தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

இந்தத் துப்புரவு நடவடிக்கைக்கு KDEBWM அமைப்பின் ஷா ஆலாம் செயல்பாட்டுத் தலைவர் முகமது ரிசால் அப்துல் கரீம் மற்றும் MBSA ஆலாம் மாநகர் மன்றத்தின் பொது சுகாதாரம் மற்றும் கழிவு நிர்வகிப்பு துறையின் இயக்குனர் ஹஸ்லினா அப் அசீஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சில நாட்களுக்கு முன்பு ஷா ஆலாம் மற்றும் சுபாங் பகுதிகளில் பெய்த கனமழையால் சிலாங்கூரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில், கம்புங் மெலாயு சுபாங் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

அங்கு ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 116.5 மில்லிமீட்டர் (mm) மழை பதிவாகி, ஆற்றின் நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால் இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த இயற்கை சீற்றத்தால் லோரோங் மெர்பாவ் (30 வீடுகள்), ஜாலான் செங்கல் (7 வீடுகள்), ஜாலான் ரெசாக் (5 வீடுகள்) மற்றும் ஜாலான் ஜாத்தி (50 வீடுகள்) என நான்கு முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 92 வீடுகள் பாதிக்கப்பட்டதோடு, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் ஒரு மீட்டர் உயரம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.