கம்போங் மெலாயு சுபாங்கில் வெள்ளத்தை தடுக்க பெரிய பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன

7 நவம்பர் 2026, 9:27 AM
கம்போங் மெலாயு சுபாங்கில் வெள்ளத்தை தடுக்க  பெரிய  பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன
கம்போங் மெலாயு சுபாங்கில் வெள்ளத்தை தடுக்க  பெரிய  பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன
கம்போங் மெலாயு சுபாங்கில் வெள்ளத்தை தடுக்க  பெரிய  பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன

கோலாலம்பூர், நவ 7 : கிள்ளான் பள்ளத்தாக்கில் அண்மையில் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கம்புங் மெலாயு சுபாங் (Kampung Melayu Subang) ஜாலான் ரெசாக் (Jalan Resak) மற்றும் டேசா சுபாங் பெராந்தாவ் (Desa Subang Perantau) ஆகிய பகுதிகளில், சிலாங்கூர் நீர்ப்பாசன வடிகால் துறை (JPS) கூடுதல் பம்புகளை நிறுவியுள்ளது.

அத்துடன் தற்போதுள்ள பம்புகளையும் மேம்படுத்தியுள்ளது.

ஜாலான் ரெசாக்கில் இருந்த பழைய பம்பிற்குப் பதிலாக வினாடிக்கு 280 லிட்டர் (l/s) நீர் வெளியேற்றும் திறன் கொண்ட புதிய பம்ப் பொருத்தப்பட்டுள்ளது; அங்கிருந்த பழைய பம்ப் டேசா சுபாங் பெராந்தாவிற்கு மாற்றப்பட்டதன் மூலம் அங்கு தற்போது சுங்கை பெலம்பாஸ் ஆற்றுக்குள் நீரை வெளியேற்ற இரு பம்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இம்மாதம் 2, 4 ஆம் தேதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், ஜாலான் ரெசாக் பகுதியில் அதிக திறன் கொண்ட பம்ப் தேவைப்படுவது கண்டறியப்பட்டது.

ஏனெனில், அங்குள்ள உள்வடிகால் நீர் முதலில் ஜாலான் ரெசாக்கில் உள்ள ஒரு குளத்திற்குச் சென்று, அங்கிருந்தே சுங்கை பெலம்பாஸ் ஆற்றுக்குச் செல்கிறது.

இதேபோல், ஆற்றின் கீழ்மறுப்பில் அமைந்துள்ள டேசா சுபாங் பெராந்தாவ் (ஜாலான் இக்லாஸ்) பகுதி, அப்பகுதியில் உள்ள காம்புங் பாரு சுபாங் பாலத்தில் இருந்து ஆற்று நீர் பின்னோக்கி வழிந்தோடும் அபாயத்தைக் கொண்டிருப்பதால், அங்கேயும் கூடுதல் பம்புகள் அவசியமாகின.

சுங்கை பெலம்பாஸ் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, வெள்ள நீர் மற்றும் ஆற்று நீர் வழிந்தோடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு குறுகிய காலத் தீர்வாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுங்கை பெலம்பாஸ் திட்டத்தின் கீழ், பலத்த மழையின் போது ஆற்று நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுவதைத் தடுப்பதற்காக, சுங்கை பெலம்பாஸ் ஆற்றங்கரையின் தாழ்வான பகுதிகள் 0.5 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை உயர்த்தப்படவுள்ளன.

கடந்த நவம்பர் 2ஆம் தேதி, ஜாலான் ரெசாக்கில் 116.5 மிமீ மழையும், நவம்பர் 4 -ஆம் தேதி டேசா சுபாங் பெராந்தாவில் 91.5 மிமீ மழையும் பதிவாகியதே அங்கு வெள்ள நீர் வடிய தாமதமானதற்குக் காரணம் என்று துறை விளக்கம் அளித்துள்ளது.

சுங்கை பெலம்பாஸ் ஆற்றில் நீர்மட்டம் மிக அதிகமாக இருந்ததால், உள்வடிகால் நீர் ஆற்றுக்குள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் தாழ்வாக இருப்பதோடு முறையான உள்வடிகால் கட்டமைப்பு இல்லாததும் மற்றொரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர திட்டங்களின் ஒரு பகுதியாக, தனியார் நிலங்களில் உள்ள வடிகால்களில் இருந்து ஆற்று நீர் மீண்டும் பின்னோக்கி ஊருக்குள் வராதபடி தடுப்பு மதகுகள் (Flap gates) பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், சுங்கை பெலுமுட் (Sungai Pelumut) ஆற்று நீர் கரைபுரண்டோடுவதைத் தடுக்க அவசரகால வெள்ளத் தடுப்புச் சுவர்கள் கட்டப்படவுள்ள இடங்களும், சுங்கை பெலம்பாஸ் ஆற்றை அகலப்படுத்துவதற்கும் நீர் தேங்கு குளங்களை அமைப்பதற்கும் சாத்தியமான இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், சுங்கை டாமன்சாரா வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் மூலம், அந்த ஆற்றின் கீழ்மறுப்புப் பகுதி அகலப்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தப்படவுள்ளதுடன், ஆற்றில் உள்ள தடைகளும் அகற்றப்படவுள்ளன என்று சிலாங்கூர் நீர்ப்பாசன வடிகால் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.