ஷா ஆலாம், நவ 11 : இன்று காலை கம்புங் மெலாயு சுபாங்கில் (Kampung Melayu Subang) பெய்த பலத்த மழையை அடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தையும் பொருட்படுத்தாது, தந்தை ஒருவர் தனது மகனை தோளில் சுமந்தபடி, தொடை அளவு வெள்ள நீரை கடந்து பள்ளிக்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான காட்சி , அங்கிருந்த ஆசிரியர் ஒருவரைக் கண்கலங்க வைத்திருக்கிறது.
இந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக ஊடகமான 'த்ரெட்ஸ்' (Threads) தளத்தில் காணொளியாகப் பகிரப்பட்டது.
அந்த காணொளியில், வெள்ள நீர் சூழ்ந்த பகுதியைக் கடந்து அந்தத் தந்தை தனது மகனுடன் பள்ளிக்கு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
வெள்ளத்தையும் கடந்து அந்த மாணவன் பத்திரமாகப் பள்ளிக்கு வந்து சேர்ந்ததை எண்ணி அந்த ஆசிரியர் தனது பதிவில் நன்றியையும் நெகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
"இந்த வீடியோவைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்துவிட்டது. இறைவனுக்கு நன்றி, நீ பத்திரமாகப் பள்ளிக்கு வந்துவிட்டாய். உனது குடும்பத்தின் அனைத்து காரியங்களும் சுமுகமாக நடக்க வாழ்த்துகிறேன்," என்று அவர் எழுதியுள்ளார்.
இதனிடையே, மீண்டும் ஒருமுறை வெள்ளப் பாதிப்புக்கு ஆளான கம்புங் மெலாயு சுபாங் பகுதி மக்களின் பாதுகாப்புக்காகப் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் சமூக ஊடகப் பயனர்களைக் கேட்டுக்கொண்டார்.
தன் பிள்ளையின் கல்விக்காக அந்தத் தந்தை செய்த தியாகத்தைப் பார்த்த சமூக ஊடகப் பயனர்கள் பலரும் தங்களின் நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
@syhznnani என்ற பயனர், "மிகவும் கவலையாக இருக்கிறது, பிள்ளையின் படிப்புக்காக அந்தத் தந்தை வெள்ளத்தில் இறங்கிச் சென்றுள்ளார், தம்பி நன்றாகப் படி" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனரான @asyraf_khabidin, இத்தகைய சவாலான சூழ்நிலையிலும் அந்தச் சிறுவன் பள்ளிக்குச் செல்ல ஆர்வமாக இருப்பதைக் கண்டு அந்தப் பெற்றோரின் வளர்ப்பைப் பாராட்டியுள்ளார்.
முன்னதாக, இன்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக கம்புங் மெலாயு சுபாங் பகுதியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஜாலான் மெர்பாவ் (Jalan Merbau) உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
வெள்ள நிலவரத்தைக் கண்காணிக்கவும் மதிப்பிடவும் புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு நிலையக் குழுவினர் காலை 8.02 மணி முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார்.









