கோலாலம்பூர், நவ.6 – மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியாவின் (BNM) பெயரைப் பயன்படுத்தி, போலி இணையத்தளங்கள் மற்றும் தீங்கிழைக்கும் கைப்பேசிச் செயலிகள் மூலம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
BNM தனது அதிகாரப்பூர்வ X சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பார்ப்பதற்கு அதிகாரப்பூர்வ இணையத்தளங்களைப் போலக் காட்சியளிக்கும் அனைத்தும் உண்மையானவை என நம்பிவிடக் கூடாது எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மோசடிக்காரர்கள் BNM பெயரில் போலி இணையத்தளங்களை உருவாக்குவதுடன், தீங்கிழைக்கும் கைப்பேசிச் செயலிகள் மூலமாகவும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், கடவுச்சொற்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான ரகசிய விவரங்களைத் திருடுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, சந்தேகத்திற்கிடமான தகவல்கள், இணையத்தளங்களை பயன்படுத்துவதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் பெயரில் வரும் சந்தேகத்திற்கிடமான செயலிகளை நம்பி தனிப்பட்ட தகவல்கள், கடவுச்சொற்கள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை வழங்க வேண்டாம்.
போலி இணையத்தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகளைத் தவிர்க்க, எந்தவொரு இணையச் சுட்டியையும் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது அவசியமாகும்.
“எப்போதும் விழிப்புடன் இருங்கள்! சந்தேகத்திற்கிடமான தகவல்களை bnm.gov.my/sahkan என்ற இணையதளத்தில் சரிபாருங்கள்” என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.







