ஷா ஆலாம், அக் 25 : கடந்த 2025-ஆம் ஆண்டில் இணைய மோசடிகள் காரணமாக நாட்டிலேயே மிக அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தில் தான் அதிகமான இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலேசியா முழுவதும் பதிவான ஒட்டுமொத்த நட்டத் தொகையான 2.97 பில்லியன் ரிங்கிட்டில் , சிலாங்கூர் மக்கள் மட்டும் 986.79 மில்லியன் ரிங்கிட் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இது நாட்டின் ஒட்டுமொத்த நட்டத்தில் மூன்றில் ஒரு பங்காகும்.
நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் நிதி அறிவு சார்ந்த விழாவில் உரையாற்றிய, மலேசிய மத்திய வங்கியின்( பெங்க் நெகாரா) ஆளுநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீத் காஃபூர் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
சிலாங்கூரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மோசடி நட்டம் 446.16 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த வேளையில், 2025-இல் அது இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்தது.
இது இணைய மோசடி அச்சுறுத்தல் எந்த அளவுக்கு கவலையளிக்கும் வகையில் வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என டத்தோஸ்ரீ அப்துல் ரஷீத் குறிப்பிட்டார்.
இதேபோல மலேசியா முழுவதும் இணைய மோசடி நட்டம் 2024-இல் 1.57 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது; 2025-இல் இது 2.97 பில்லியன் ரிங்கிட்டாக எகிறியது.
இதில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இரு பகுதிகளும் தொடர்ந்து மூன்றாண்டுகளாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக நீடிக்கின்றன.
இவ்விரு பகுதிகளின் கூட்டு நட்டம் மட்டும் 2025-இல் சுமார் 1.77 பில்லியன் ரிங்கிட்டாகும்.
கோலாலம்பூர் மட்டும் 2025-இல் 782.86 மில்லியன் ரிங்கிட் நட்டத்தைப் பதிவு செய்தது.
இது 2024-இல் அங்கு பதிவான 293.30 மில்லியன் ரிங்கிட்டை விட மிக அதிகமாகும்.
மோசடி முறைகளைப் பொறுத்தமட்டில், இல்லாத முதலீட்டுத் திட்டங்கள் தேசிய அளவில் அதிகபட்சமாக 1.46 பில்லியன் ரிங்கிட் நட்டத்தை ஏற்படுத்தி முதலிடத்தில் உள்ளன.
இதனைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு குற்றங்கள் அல்லது தொலைப்பேசி அழைப்புகள் மூலம் ஏமாற்றும் முறைகள் 802.47 மில்லியன் ரிங்கிட் நட்டத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
இந்த அச்சுறுத்தலைக் கையாள்வதற்காக மத்திய வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து திருடப்பட்ட பணத்தை விரைவாகக் கண்டறிவதற்கும் இணைய வங்கிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.
எனினும், எவ்வளவு பலமான பாதுகாப்பு முறைகள் இருந்தாலும் பயனீட்டாளர்களின் சுய விழிப்புணர்வே முதல் தற்காப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக வேகமாக சில நொடிகளில் நடப்பதால், பயனீட்டாளர்கள் சிந்தித்துச் செயல்படும் அவகாசம் குறைந்துவிடுகிறது.
எனவே வங்கி அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகள் போல நடித்து, கணக்கு முடக்கப்படும் என்று மிரட்டிப் அவசரமாகப் பணத்தை மாற்றுமாறு யாராவது வற்புறுத்தினால், பொதுமக்கள் உடனடியாகப் பணத்தை அனுப்பாமல் அதிகாரப்பூர்வ வழிகளில் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
வங்கி அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்களும் தங்களின் பாதுகாப்பு கட்டுப்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும், வாடிக்கையாளர்களுக்குச் சரியான எச்சரிக்கைகளை வழங்க வேண்டும் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், வழக்கத்திற்கு மாறான பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிவதற்கும் பயனர்களுக்குச் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை அனுப்புவதற்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் சுட்டிக் காட்டினார்.










