ஷா ஆலாம், நவ.6: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள தீபாவளி அன்று சிலாங்கூரின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இரவு நேரத்திலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் மழையின்றி சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிற்பகல் வேளையில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5-ஆம் அன்று தீபகற்ப மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், பேராக், பினாங்கு, கெடா, பெர்லிஸ், பகாங், திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் இத்தகைய வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, இரவு நேரத்தில் மேற்குறிப்பிட்ட பெரும்பாலான மாநிலங்களின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும், பெர்லிஸில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் ஞாயிற்றுக்கிழமை கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்படும் என கிள்ளான் மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிள்ளான் துறைமுக வானிலை கண்காணிப்பு நிலையத்தின் முன்னறிவிப்பின்படி, அதிகாலை 5.02 மணியளவில் கடல் நீர்மட்டம் 5.2 மீட்டரை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எச்சரிக்கை நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் கடல் நீர்மட்டம் 4.0 மீட்டரை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கிள்ளான் துறைமுகத்தின் கடல் நீர்மட்ட அளவீட்டின்படி, 5.0 முதல் 5.3 மீட்டர் வரையிலான அளவு எச்சரிக்கை நிலையாகவும், 5.4 முதல் 5.5 மீட்டர் வரையிலான அளவு அபாய நிலையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2026/2027ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கியுள்ளதுடன், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







