வாட்ஸ்அப் மூலம் பரவும் ZIP கோப்புகள்: வங்கிக் கணக்கு விவரங்கள் திருடப்படும் அபாயம்

6 நவம்பர் 2026, 3:22 AM
வாட்ஸ்அப் மூலம் பரவும் ZIP கோப்புகள்: வங்கிக் கணக்கு விவரங்கள் திருடப்படும் அபாயம்

கோலாலம்பூர், நவ.6 – வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல் பரிமாற்றத் தளங்கள் வழியாகப் பகிரப்படும் சந்தேகத்திற்கிடமான ZIP கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து திறப்பதன் மூலம், பயனர்களின் கடவுச்சொற்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக மலேசிய பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தத் தீங்கிழைக்கும் கோப்புகளுக்குள் மறைந்திருக்கும் Malware மென்பொருட்கள், கைப்பேசிகள் மற்றும் கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்களைத் திருடுவதுடன், பயனர்களின் இணையச் செயல்பாடுகளையும் கண்காணிக்கக்கூடும்.

இதனை கோலாலம்பூர் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (UniKL) டாக்டர் ஷாஃபிசா முகமட் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.

மேலும், பயனர்கள் தங்களது சாதனங்களில் தட்டச்சு செய்யும் கடவுச்சொற்கள் மற்றும் உள்நுழைவு விவரங்களைத் தீங்கிழைக்கும் மென்பொருட்கள் பதிவு செய்யக்கூடும்.

குறிப்பாக, இணைய வங்கிச் சேவைகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளுக்கான TAC அங்கீகாரக் குறியீடுகளைக் கைப்பற்றி, மோசடிக்காரர்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அபாயமும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மலேசிய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவான MyCERT, வாட்ஸ்அப் வழியாக Invoice, Statement of Account மற்றும் நிதிப் பரிவர்த்தனை ஆவணங்கள் போன்ற பெயர்களில் அனுப்பப்படும் தீங்கிழைக்கும் ZIP கோப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.

இக்கோப்புகளைத் திறப்பதன் மூலம் Windows கணினிகளில் Malware நிறுவப்பட்டு, சாதனங்களை மோசடிக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

அதேபோல், நவம்பர் 4ஆம் தேதி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யும் வாட்ஸ்அப் வழியாகப் பரவும் சந்தேகத்திற்கிடமான ZIP கோப்புகள் மற்றும் இணைய இணைப்புகள் குறித்து எச்சரித்திருந்தது.

தெரிந்த நபர்கள் அல்லது நம்பகமான நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து, பயனர்களைக் கோப்புகளைத் திறக்கத் தூண்டுவதாகவும் அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தெரியாத நபர்களிடமிருந்து வரும் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து திறப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தெரிந்த நபர்களிடமிருந்து கோப்புகள் வந்தாலும், அவற்றின் உண்மைத்தன்மையைத் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்திய பின்னரே திறக்க வேண்டும். மேலும், நம்பகமான Antivirus மென்பொருட்களைச் சாதனங்களில் நிறுவி, அவற்றைத் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.