ஷா ஆலாம், நவ 5 : இன்று மாலை பெய்த கனமழை காரணமாக கோலா சிலாங்கூர், புஞ்சாக் ஆலாமில் (Puncak Alam) உள்ள பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட இடங்களில் புஞ்சாக் ஆலாம் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக (UiTM) கிளை, சௌஜானா உத்தாமா (Saujana Utama), தாமான் ஹில்பார்க் (Taman Hillpark), தாமான் ஸ்ரீ ஆலாம் (Taman Seri Alam) மற்றும் புஞ்சாக் ஆலாமில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை அடங்கும்.
திரெட்ஸ் (Threads) சமூக ஊடகப் பயனர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளி பகிர்வுகளின் வாயிலாக, பல வழித்தடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதும், சில சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதும் தெரியவந்தது.
மாலை 5.58 மணிக்குத் தகவல்களைப் புதுப்பித்த @thisiswuan என்ற திரெட்ஸ் பயனர், தாமான் ஹில்பார்க்கில் உள்ள நீர் தேக்கக் குளம் நிரம்பி வழிவதை வீடியோ பதிவாகப் பகிர்ந்துள்ளார்.
UiTM புஞ்சாக் ஆலாம் கிளையில், வெள்ளம் காரணமாக வாசல் 1 (சௌஜானா உத்தாமா மற்றும் UiTM மருத்துவமனைக்கான முதன்மை வாசல்) மற்றும் வாசல் 3 (ஹில்பார்க் செல்லும் வழி) ஆகியவை மூடப்பட்டுள்ளதாகத் திரெட்ஸ் பயனர் @fizaabdullah தெரிவித்துள்ளார்.
ஜாலான் மேருவில் (Jalan Meru) உள்ள வாசல் 2 மட்டுமே தற்போது போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தாமான் ஸ்ரீ ஆலாம் பகுதியில் தங்களது குழுவினர் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார்.
பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், இது குறித்த அடுத்தடுத்த தகவல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.






