ஷா ஆலம், ஏப்ரல் 22 - சிலாங்கூரில் வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் மேலும் துல்லியமாகவும், மீள் தன்மை கொண்டதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, விரிவான மற்றும் தரவு அடிப்படையிலான அணுகுமுறை பலப்படுத்தப் பட வேண்டும் என்று மலேசிய நீர் மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி சங்கத்தின் (AWER) தலைவர் எஸ். பியாரபாகரன் தெரிவித்துள்ளார்.
வடிகால் அமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்குத் தரவு பகுப்பாய்வு முக்கிய அடிப்படையாக இருக்க வேண்டும் என்றார். கணிக்கக்கூடிய மற்றும் கணிக்க முடியாத மழைப் பொழிவின் தன்மைகளைக் கண்டறியவும் இது உதவும் என அவர் குறிப்பிட்டார்.
துல்லியமான மற்றும் விரிவான தரவுகளைப் பயன்படுத்தாமல், தற்போதைய மாற்றங்களுக்கு ஏற்ப வடிகால் அமைப்புகளை வடிவமைக்க முடியாது. இதனால், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டாலும் வெள்ள அபாயம் மீண்டும் ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.
"தற்போதுள்ள வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் முக்கிய பலவீனம், அவை நீரோட்டத்தின் மேல்பகுதியிலிருந்து கீழ் பகுதி வரையிலான முழு அமைப்பையும் கருத்தில் கொள்ளாமல் இருப்பதுதான். இதனால், ஒரு பகுதியில் செயல்படுத்தப் படும் தீர்வு, மற்றொரு பகுதியில் வெள்ள அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
"ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கவனம் செலுத்தும் திட்டங்கள் அங்கு வெற்றிகரமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவை பிரச்சினையைக் கீழ் பகுதிக்கு நகர்த்துகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.
நீர் மற்றும் எரிசக்தி நிலைத்தன்மை மையத்தின் (CWES) தலைமைச் செயல் அதிகாரியுமான பியாரபாகரன், விரைவான வளர்ச்சியால் நீர் புகாத பகுதிகள் அதிகரித்துள்ளன என்றார். இது, தற்போதுள்ள வடிகால் அமைப்புகளின் கொள்ளளவைத் தாண்டி மேற்பரப்பு நீர் வழிந்தோடலை அதிகரிப்பதால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.
ஷா ஆலம், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஜெயா போன்ற சிலாங்கூரின் பல பகுதிகள் வெள்ளத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பழைய குடியிருப்புகள் தற்போது புதிய வளர்ச்சிகளால் சூழப்பட்டுள்ளன. மேலும், வெள்ளச் சமவெளிகள், ஈரநிலங்கள் மற்றும் ஆற்றங்கரையோரங்கள் போன்ற இயற்கையாகவே ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ளன.
நிலப் பயன்பாட்டு மாற்றங்களுக்கு ஏற்ப மேம்படுத்தப் படாத பழைய வடிகால் அமைப்புகள், குறிப்பாக மேல் பகுதிகளில் இருந்து நேரடியாக முக்கிய ஆறுகளுக்குத் தண்ணீரை அனுப்பும் திட்டங்களால், அதிகரிக்கும் நீர் ஓட்டத்தைத் தாங்க முடியாத நிலைக்கு பங்களிக்கின்றன என்று பியாரபாகரன் விளக்கினார்.
இதற்கு உடனடித் தீர்வாக, வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இல்லை என்பதை உறுதி செய்தல், நீர் தேக்கக் குளங்களைத் தொடர்ந்து பராமரித்தல் மற்றும் நிகழ்நேர வெள்ள எச்சரிக்கை முறைகளைச் செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அவர் பரிந்துரைத்தார்.
"நீண்ட கால தீர்வுகளாக, ஆற்றுப் படுகைகளின் தரவுகளின் அடிப்படையில் மேம்பாட்டுத் திட்டங்களை மறுசீரமைத்தல், உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் மேம்பாடுகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துதல், மற்றும் நீர் மேலாண்மையில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன," என்றார் அவர்.
நெதர்லாந்தில் பயன்படுத்தப்படும் அணுகுமுறையையும் அவர் சுட்டிக்காட்டினார். நீர் ஓட்டத்தை மெதுவாக்குதல் மற்றும் ஆறுகளுக்கு இடம் கொடுத்தல் என்ற கருத்தை வலியுறுத்தும் அந்த அணுகுமுறையை, உள்ளூர் புவியியல் மற்றும் கால நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்றார்.
மேலும், கிள்ளான் ஆற்றில் ஏற்படும் மாசுபாடு, திடீர் வெள்ள அபாயத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மையான நீர் ஆதாரங்களுக்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது என்று அவர் கூறினார்.
"மாசு பாட்டைத் திருப்பியமைக்கும் (pollution reversal) அணுகுமுறை மூலம் ஆற்றைச் சீரமைக்க முடியும், ஆனால் இதற்கு உள்கட்டமைப்பு, கொள்கை மற்றும் அமலாக்கத்தில் பெரிய மாற்றங்கள் தேவை," என்றார் அவர்.
நேற்று, சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா, வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மாநில அரசாங்கம் முழு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், முறையான திட்டமிடல் மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் அறிவுறுத்தினார்.
இன்று, மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிலாங்கூர் வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் மூலம், மாநிலத்தில் வெள்ளப் பிரச்சினைக்கு இன்னும் நான்கு ஆண்டுகளில் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடரும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண தரவு அடிப்படையிலான அணுகுமுறை அவசியம்
22 ஏப்ரல் 2026, 7:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?



