2027 வரவு செலவுத் திட்டம் : கல்வி, வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி ஒதுக்கீடு பல்லின மக்களின் மேம்பாட்டை வலுப்படுத்தும்

22 அக்டோபர் 2026, 1:00 AM
2027 வரவு செலவுத் திட்டம் : கல்வி, வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி ஒதுக்கீடு பல்லின மக்களின் மேம்பாட்டை வலுப்படுத்தும்

கோலாலம்பூர், அக்.21 : 2027-ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தின் கீழ், பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக RM2 பில்லியன் ஒதுக்கீடும், முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு RM80 மில்லியன் ஒதுக்கீடும், நாட்டின் கல்வி வளர்ச்சியையும் பல்லின மக்களின் நல்வாழ்வையும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

இந்த ஒதுக்கீடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு, ஆரம்பக் கல்வியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதுடன், பல்வேறு சமயங்களைச் சார்ந்த சமூகங்களின் தேவைகளையும் கவனத்தில் கொள்வது அவசியம் என்றார்.

வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு

கல்வி என்பது ஒருவரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதுடன், அவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது.

எனவே,மாணவர்கள் சிறந்த கற்றல் வசதிகளைப் பெறுவதையும், கல்வியின் மூலம் எதிர்காலத்தில் தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புகளைப் பெறுவதையும் உறுதிப்படுத்த இத்தகைய முதலீடுகள் தொடர வேண்டுமென்றாரவர்.

கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், இளம் தலைமுறையினரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவதுடன், சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கும் பங்களிக்கும் என அவர் கருத்துரைத்தார்.

இதற்கிடையில், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு RM80 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் பாப்பாராய்டு வரவேற்றார்.

இந்த நிதி ஒதுக்கீடு, சீனக் கோயில்கள், பௌத்த வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்கள், இந்துக் கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு சமய வழிபாட்டுத் தலங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுமென அவர் தெரிவித்தார்.

மேலும்,பல்வேறு இனங்களையும் சமயங்களையும் கொண்ட மலேசிய சமூகத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள், சமூக நல்வாழ்வையும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த உதவும் என அவர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், பள்ளிகளின் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு, குறிப்பாக உட்கட்டமைப்புச் சவால்களை எதிர்கொள்ளும் தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் சூழலை மேம்படுத்த உதவுமென அரசியல் ஆய்வாளர் டாக்டர் ஷர்மின் குட்டி சிவராமன், மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.

அரசியல் ஆய்வாளர் டாக்டர் ஷர்மின் குட்டி சிவராமன்

பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களைச் சீரமைத்தல், வகுப்பறைகளை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை அதிகரித்தல் மற்றும் மாணவர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான கற்றல் சூழலை உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக, முன்னாள் தோட்டப் பகுதிகளிலும் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்கள் வாழும் இடங்களிலும் அமைந்துள்ள சில தமிழ்ப்பள்ளிகள் நீண்ட காலமாக உட்கட்டமைப்புச் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

இத்தகைய பள்ளிகளின் தேவைகளுக்கு உரிய கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பள்ளிக் கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு,கற்றல் வசதிகள் மேம்படுத்தப்படும்போது மாணவர்கள் மிகவும் வசதியான சூழலில் கல்வி கற்க முடியும்.

அதேவேளை, ஆசிரியர்களும் தங்களது கற்பித்தல் பணிகளைச் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

தமிழ்ப் பள்ளிகளுக்கான ஆதரவு சமூக மற்றும் அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்ட டாக்டர் ஷர்மின், தமிழ்ப்பள்ளிகள் மலேசிய இந்தியர்களின் பண்பாட்டு அடையாளத்துடனும் சமூக அக்கறைகளுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன என்றார்.

தமிழ்ப்பள்ளிகளின் உட்கட்டமைப்புத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் காட்டும் அக்கறை, இந்தியச் சமூகத்தின் கல்வி தொடர்பான தேவைகளுக்குப் பதிலளிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்த நம்பிக்கையை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவது நீண்டகால முதலீடாகக் கருதப்பட வேண்டும் என்றும், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2027 வரவு செலவுத் திட்டத்தில் பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக தேசியப் பள்ளிகளுக்கு RM900 மில்லியனும், சீனப் பள்ளிகளுக்கு RM100 மில்லியனும், தமிழ்ப் பள்ளிகளுக்கு RM50 மில்லியனும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.