ஷா ஆலாம், நவ.3 – சிலாங்கூரின் விண்வெளி துறையை (Aerospace Industry) மேலும் மேம்படுத்துவதுடன், உள்ளூர் திறமையாளர்களை உருவாக்கி உயர்தரத் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதனை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இத்துறையை சிலாங்கூரின் போட்டித்தன்மை மிக்க மையமாக நிலைநிறுத்தும் நோக்கில், சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடனான ஒத்துழைப்புகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

“உயர்தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றுவதற்குத் தேவையான திறன்களையும் வாய்ப்புகளையும் சிலாங்கூர் இளைஞர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இதன் மூலம் இந்தத் துறையின் வளர்ச்சியில் அவர்களும் நேரடியாகப் பங்கேற்று தங்களது தொழில் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடியும்,” என அமிருடின் தெரிவித்தார்.
பந்திங்கில் உள்ள மலேசிய விண்வெளி முகமையான Malaysian Space Agency (MYSA) நிறுவனத்திற்கு சென்றிருந்ததை தனது அதிகாரத்துவ முகநூல் பதிவில் அமிருடின் பகிர்ந்திருந்தார்.
இதில் சிலாங்கூர் விண்வெளி மன்றத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அவர், மாநிலத்தின் விண்வெளி துறை வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, MYSA நிறுவனத்தின் செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு, பொருத்துதல் மற்றும் பரிசோதனை மையத்தையும் (Satellite Assembly, Integration and Testing Facility) அவர் பார்வையிட்டார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த மையம், செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றின் உதிரிப் பாகங்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், பூமியிலேயே பல்வேறு கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்தச் சோதனைகளின் மூலம் செயற்கைக்கோள்களும் அவற்றின் பாகங்களும் கடுமையான விண்வெளிச் சூழல்களைத் தாங்கக்கூடிய வகையில் உறுதியாகவும், விண்வெளிப் பயணத்தின்போது முறையாகச் செயல்படக்கூடிய நிலையிலும் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.









