தீபாவளி வியாபாரம்: இணையப் போட்டியை வென்று களை கட்டும் நேரடிச் சந்தைகள்

2 நவம்பர் 2026, 12:16 PM
தீபாவளி வியாபாரம்: இணையப் போட்டியை வென்று களை கட்டும் நேரடிச் சந்தைகள்

கிள்ளான், நவ 2 : இணையம் வழி பொருட்களை வாங்குவது அதிகரித்து வந்தாலும், பண்டிகைக் காலங்களில் குடும்பத்தினருடன் கடைகளுக்குச் சென்று பொருட்களை நேரில் பார்த்து, தரத்தை உறுதிப்படுத்தி வாங்கும் பாரம்பரியத்தை மக்கள் இன்னும் தொடரவே செய்கின்றனர்.

இணையம் வழி பொருட்களை வாங்கும் போது, நேரத்தை மிச்சப்படுத்த முடிந்தாலும், பொருட்களை நேரில் பார்த்துத் தேர்ந்தெடுப்பதிலும், விலையைப் பேரம் பேசி வாங்குவதிலும் கிடைக்கும் திருப்தி தனித்துவமானது என்கின்றனர் கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானா தீபாவளிச் சந்தையில் பொருட்களை வாங்க வந்த மக்கள் .

Kesigan Devaraj

அவ்வகையில், என்ன தான் வேலைப்பளுவாக இருந்தாலும், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் குடும்பத்தினருடன் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதையே தாம் விரும்புவதாகக் கூறுகிறார் கேசிகன் தேவராஜ்.

குறிப்பாக, குழந்தைகளுக்கான ஆடைகளை வாங்கும்போது அவற்றின் அளவு மற்றும் துணியின் தரத்தை நேரில் சரிபார்க்க முடிவதால் தீபாவளி சந்தை தமது தேர்வாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“இவ்வாண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்காக அளவான முறையில் தீபாவளியைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம். இணையம் வழி பொருட்களை வாங்கும்போது விலையைப் பேரம் பேச முடியாது.

குறிப்பிடப்பட்டுள்ள விலையையே செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், நேரடியாகக் கடைகளுக்குச் செல்லும்போது விற்பனையாளர்களிடம் விலையைப் பேசி வாங்க முடியும் என்றார் அவர்.

மேலும் “விற்பனையாளர்கள் நியாயமான விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்தால், வாடிக்கையாளர்களாகிய நாங்கள் நிச்சயம் வாங்குவதற்கு முன்வருவோம்,” என்றார்.

Minachi

இதனிடையே, தீபாவளிக்கான வீட்டைச் சுத்தம் செய்தல், அலங்கரித்தல் மற்றும் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தொடங்கிவிட்டதாக தெரிவித்தார் மீனாட்சி.

வீட்டு அலங்காரப் பொருட்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வாங்கப்படுவதால் தரமான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

“பொருட்களை வாங்குவதற்கு முன்பு அவற்றைப் பார்த்து, தொட்டு, தரத்தை உறுதிப்படுத்திக் கொள்வது எனக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக, வீட்டு அலங்காரப் பொருட்களைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வாங்குவதால், தரமான பொருட்களை வாங்குவதற்குச் சற்று அதிகமாகச் செலவிடவும் தயாராக இருக்கிறேன்.

“ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிச் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். குறிப்பாக, ஜாலான் தெங்கு கிளானாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வரும் விற்பனையாளர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

“அவர்களிடம் பொருட்களை வாங்கும்போது தரம் குறித்து ஓரளவு நம்பிக்கை இருப்பதால், விலை நியாயமாக இருந்தால் நேரடி விற்பனையாளர்களுக்கு நிச்சயம் ஆதரவு வழங்குவேன்,” என்றார்.

T. Kannan

இவ்வேளையில், இணையம் வழி வாங்குதல் அவசரத் தேவைகளுக்கு உதவியாக இருந்தாலும், தீபாவளிக்கான பொருட்களை நேரடியாகப் பார்த்து வாங்குவதிலேயே அதிக மனநிறைவு கிடைப்பதாக டி. கண்ணன் தெரிவித்தார்.

“அவசரத் தேவைகளுக்கு இணையம் வழியில் பொருட்களை வாங்கலாம். இருப்பினும், ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அதன் தரத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நேரடிக் கொள்முதலே சிறந்தது.

“விற்பனையாளர்கள் பொருட்களின் தரத்திற்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க வேண்டும்.நியாயமான விலையில் தரமான பொருட்களை வழங்கினால், அது வாடிக்கையாளர்களைப் பொருட்களை வாங்குவதற்கு மேலும் ஊக்குவிக்கும்.

“நேரடியாகப் பொருட்களை வாங்கும்போது கிடைக்கும் மனநிறைவு தனித்துவமானது,” என்றார்.

தீபாவளி பொருட்கள் வாங்குவது என்பது வெறும் பொருட்களை வாங்குவதோடு முடிந்து விடுவதில்லை.

குடும்பத்தினருடன் கடைவீதிகளுக்குச் செல்வது, விருப்பமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது, பொருட்களின் தரத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது, விலையைப் பேரம் பேசுவது எனப் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியையும் குடும்ப உறவுகளையும் இணைக்கும் அனுபவமாகவும் அது அமைகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.