இணைய வர்த்தகப் போட்டிக்கு மத்தியில் தீபாவளிச் சந்தையில் வாழ்வாதாரத்தைத் தேடும் வியாபாரிகள்

1 நவம்பர் 2026, 11:10 AM
இணைய வர்த்தகப் போட்டிக்கு மத்தியில்  தீபாவளிச் சந்தையில் வாழ்வாதாரத்தைத் தேடும் வியாபாரிகள்
இணைய வர்த்தகப் போட்டிக்கு மத்தியில்  தீபாவளிச் சந்தையில் வாழ்வாதாரத்தைத் தேடும் வியாபாரிகள்
இணைய வர்த்தகப் போட்டிக்கு மத்தியில்  தீபாவளிச் சந்தையில் வாழ்வாதாரத்தைத் தேடும் வியாபாரிகள்

கிள்ளான், நவ 1 : சிறு வியாபாரிகள் அதிகம் லாபம் பார்ப்பது என்றால் அது பண்டிகை காலம் அல்லது சிறப்பு விழா காலங்களில் மட்டும் தான்.

வியாபாரம் செய்யத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம், மழை போன்ற ஒத்துழைக்காத வானிலை என இவற்றுக்கு மத்தியில் ஆண்டு முழுவதும் எதிர்பார்த்திருக்கும் அந்த லாபகரமான காலத்திற்கு, தற்போது இணையவழி வர்த்தகமும் , அவர்களுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

முந்தைய ஆண்டுகளைப் போல் தங்களால் அதிக லாபத்தை ஈட்ட முடிவதில்லை என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் , கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானாவில் தீபாவளிச் சந்தையில் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள்.

Parvathy Rajaratanam

“இவ்வாண்டு பல்வேறு இடங்களில் தீபாவளிச் சந்தைகள் நடைபெறுவதால், வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தேர்வுகள் உள்ளன. வார இறுதி நாட்களில் ஓரளவு வாடிக்கையாளர்கள் வருகின்றனர். ஆனால், வார நாள்களில் விற்பனை குறைவாகவே உள்ளது. அதோடு, தொடர்ந்து பெய்யும் மழையும் விற்பனைக்குப் பெரும் தடையாக உள்ளது.

கடந்த காலங்களில் ஒரு ஜோடி ஆடைகளை RM45க்கு விற்பனை செய்தோம். ஆனால், இவ்வாண்டு இரண்டு ஜோடி ஆடைகளை RM50க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற வியாபாரிகளுடன் போட்டியிட வேண்டியிருப்பதால் விலையைக் குறைக்க வேண்டியுள்ளது. இதனால் எங்களுடைய இலாபமும் கடந்த ஆண்டுகளைவிடக் குறைந்துள்ளது." என 15 ஆண்டுகளாகப் பாரம்பரிய இந்திய ஆடைகள் விற்பனையில் ஈடுபட்டு வரும் பர்வதி ராஜரத்தினம் தெரிவித்தார்.

“இணையவழியில் வாங்கும்போது சில நேரங்களில் ஆடைகள் சேதமடைந்தோ அல்லது எதிர்பார்த்த தரத்தில் இல்லாமலோ கிடைக்கலாம். நேரடியாக வாங்கும்போது ஆடைகளைத் தொட்டுப் பார்த்து, தரத்தைச் சரிபார்த்து வாங்க முடியும். எனவே, வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து ஆடைகளை வாங்குவதை விரும்ப வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.

Navaneetham Mathilangan

இதனிடையே, 20 ஆண்டுகளாக வீட்டு அலங்காரப் பொருட்களை விற்பனை செய்து வரும் நவநீதம் மதிலங்கன், நேரடி விற்பனைக்கு தற்போது வாடிக்கையாளர்களின் ஆதரவு குறைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“நானும் இணையவழி விற்பனையில் ஈடுபட்டு வருவதால், வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை என்னால் அதிகம் உணர முடிகிறது. இணையவழியில் பொருள்களை விற்பனை செய்யும்போது சில நேரங்களில் பணத்தைத் திரும்பப் பெறுதல், பொருள்களைத் திருப்பி அனுப்புதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

“ஆனால், நேரடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் பொருள்களைத் தொட்டுப் பார்த்து, அதன் தரத்தை உறுதிப்படுத்தி வாங்க முடியும்.

“எங்களைப் பொறுத்தவரையில் விலைப் போட்டியும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. நாங்கள் வெளிநாடுகளிலிருந்து நேரடியாகப் பொருள்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதால், விற்பனை சேவை வரி (SST) உள்ளிட்ட பல்வேறு செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

“வாடிக்கையாளர்களைக் கவர இலவசப் பரிசுகள், சிறப்புத் தள்ளுபடிகள் போன்ற சலுகைகளை வழங்கி வருகிறோம். அதேவேளை, தற்போதைய வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நவீன வடிவமைப்புகளைக் கொண்ட பொருள்களையும் அறிமுகப்படுத்துகிறோம்,” என்றார்.

Athmanathan Naidu


இவ்வேளையில், கிள்ளானில் கடந்த 15 ஆண்டுகளாகப் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆத்மநாதன் நாயுடு, “ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், இவ்வாண்டும் கடந்த சில நாட்களாக விற்பனை ஓரளவு திருப்திகரமாக உள்ளது என மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

“ எனது அனுபவத்தில் சுமார் 90 விழுக்காடு வாடிக்கையாளர்கள் பட்டாசுகளை நேரடியாகப் பார்த்து வாங்குவதையே விரும்புகின்றனர்.

“பட்டாசுகளைப் பொறுத்தவரையில், அவற்றின் நிலை மற்றும் தரத்தை நேரில் பார்த்து உறுதிப்படுத்தி வாங்குவது முக்கியம். மேலும், இணையவழியில் பட்டாசு விற்பனை செய்வது தொடர்பாகச் சட்ட விதிமுறைகளும் உள்ளன. நாங்கள் உரிய அனுமதிகளையும் மாநகராட்சி மன்றத்தின் ஒப்புதல்களையும் பெற்று விற்பனை செய்வதால், வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுகிறது.

“இவ்வாண்டு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சமூக ஊடகங்களில் விளம்பரங்களை முன்னெடுத்து வருகிறோம். அதுமட்டுமின்றி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற சிறப்புச் சலுகைகளையும் வழங்குகிறோம்,” என்றார்.

Kalaivani nandagumaran

இணையம் வழி போட்டிகள் இருந்தாலும், தரமும் நேரில் சுவைத்துப் பார்க்கும் வசதியும் வழக்கமான வாடிக்கையாளர்கள் தன்னை தேடி வரச் செய்வதாகக் கூறுகிறார் 11 ஆண்டுகளாகப் பண்டிகைக் கால பலகார விற்பனையில் ஈடுபட்டு வரும் கலைவாணி நந்தகுமரன்.

“கிள்ளான் பகுதியில் பல பிஸ்கட் கடைகள் இருந்தாலும், எங்களுடைய பிஸ்கட்டுகளின் சுவை காரணமாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எங்களிடம் முன்பதிவு செய்து வாங்குகின்றனர்.

“கடந்த 11 ஆண்டுகளாக மூலப்பொருள்களின் விலை அதிகரித்த போதிலும், வாடிக்கையாளர்களை இழந்து விடக் கூடாது என்பதற்காக, பிஸ்கட் விற்பனை விலையை மாற்றாமல் ஒரே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறேன்' என்றார் அவர்.

இணையவழி வர்த்தகப் போட்டிக்கு மத்தியில், இவர்களைப் போன்று பல வியாபாரிகள், விற்பனையைத் தக்க வைத்துக்கொள்ள விலைச் சலுகைகள், இலவசப் பரிசுகள், சமூக ஊடக விளம்பரங்கள் எனப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

பேரம் பேசி பொருட்களை வாங்கும் திருப்தியும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கடைவீதிகளில் இருந்து தான் கிடைக்கிறது.

எனவே, பாரம்பரிய கடை வீதிகளின் உற்சாகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க, ஓராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இதுபோன்ற தீபாவளிச் சந்தைக்கு வாடிக்கையாளரின் நேரடி ஆதரவு அவசியமாகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.