அலோர் ஸ்டார், நவ 2 : பாகிஸ்தானில் இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில், 130 மலேசியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து , தொடர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மலேசியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இரு வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரால் இந்த கைது நடவடிக்கை உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பாகிஸ்தானின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நாட்டின் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
"கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் பலர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"அதே காலகட்டத்தில், கெடா போலீசாரும் கூலிம் ஹை-டெக் பூங்காவில் (KHTP) ஒரு சோதனையை நடத்தினர். அதில் 33 பாகிஸ்தானியர்களும், சில இந்திய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
"இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, பாகிஸ்தானின் சம்பந்தப்பட்ட துறைகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரை நான் கேட்டுக்கொண்டேன்," என்று அவர் கூறினார்.
அலோர் ஸ்டாரில், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த கெடா மாநில டாக்சி, வாடகை கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கான சிறப்பு நிதியுதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.







