ஹைதராபாத், ஜூலை 8 - பாகிஸ்தானின் கராச்சி (Karachi) கடல் பகுதியில், ஐந்து பணியாளர்களுடன் பயணித்த போயிங் 737 (Boeing 737) ரக சரக்கு விமானம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மாயமானதைத் தொடர்ந்து, அங்குப் பிரம்மாண்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கராச்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'கே2 ஏர்வேஸ்' (K2 Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம், கராச்சி துறைமுக நகருக்கு மேற்கே 155 கடல் மைல் (287 கிலோமீட்டர்) தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான (ATC) தொடர்பை இழந்ததாகப் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தச் சரக்கு விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து (Sharjah) கராச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணியளவில், விமானத்தின் வழிசெலுத்தல் அமைப்பில் (Navigation system) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானி கராச்சி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
அடுத்த மூன்று நிமிடங்களில் அந்த விமானம் ரேடார் திரையிலிருந்து முற்றிலும் மறைவதற்கு முன்பாக, அரபிக்கடலில் மிக அதிவேகமாகக் கீழ்நோக்கிச் சரிந்து விழுந்தது ரேடாரில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாயமான விமானத்தைக் கண்டறியும் நோக்கில் பல்வேறு அரசு முகமைகளை உள்ளடக்கிய கூட்டுத் தேடுதல் மற்றும் மீட்புப் நடவடிக்கை கடலில் உடனடியாகத் தொடங்கப்பட்டது.







