சுகாதார அமைச்சில் 1,176 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பற்றாக்குறை

2 நவம்பர் 2026, 7:09 AM
சுகாதார அமைச்சில் 1,176 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பற்றாக்குறை

ஷா ஆலாம் , நவ 2 - மலேசிய சுகாதார அமைச்சு தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உட்பட 1, 176 வாகன ஓட்டுநர்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பொதுச் சேவை ஊதிய முறையின் (SSPA) அமலாக்கத்தை எளிதாக்குவதற்காக, கடந்த 2024-ஆம் ஆண்டில் பொதுச் சேவை துறை (JPA) ஓட்டுநர் ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததே இந்தத் தாமதத்திற்குக் முதன்மைக் காரணமாகும்.

பொதுச் சேவை ஆணையத்தின் (SPA) ஆட்சேர்ப்பு செயல்முறைகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, 2027 ஏப்ரல் முதல் இந்த காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான அமைச்சின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அங்கீகரிக்கப்பட்ட 8,863 பணியிடங்களில் 7,687 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

இதில் தீபகற்ப மலேசியாவில் தான் அதிகபட்சமாக 1,003 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதனைத் தொடர்ந்து சரவாக் (92), சபா (73) மற்றும் லபுவான் (8) ஆகிய பகுதிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

புதிய SSPA திட்டத்தின் கீழ், முந்தைய வாகன ஓட்டுநர் முறை 'திறன்சார் சேவைகள் (H)' பிரிவின் கீழ் வரும் 'பொது சேவை உதவியாளர் (ஓட்டுநர்)' திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் காரணமாக, ஆட்சேர்ப்பு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஆம்புலன்ஸ்களை இயக்குவதற்குத் தகுதியானவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருப்பதை உறுதி செய்ய தகுதி அளவுகோல்கள் தீவிரமாக மறுஆய்வு செய்யப்படுகின்றன.

மேலும், இந்த புதிய முறை பரந்த அளவிலான கடமைகள், பலதரப்பட்ட திறன்கள் மற்றும் பல்பணிகளைச் செய்வதை ஊக்குவிக்கிறது.

தற்போது இதற்கான விண்ணப்பங்களை SPA பரிசீலித்து வருவதாகவும், ஓட்டுநர் திறன் தேர்வு (UKP) கடந்த அக்டோபர் 27 -ஆம் தேதி நிறைவடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியது.

எனினும், இந்த புதிய ஆட்சேர்ப்பு செயல்முறை, தற்போதைய காலிப்பணியிடங்கள், ஓய்வுபெறுபவர்கள், பணியை விட்டு விலகுபவர்கள் மற்றும் சுகாதார நிலையங்களின் அவசர செயல்பாட்டுத் தேவைகளைக் கணக்கில் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும்.

SSPA அமலாக்கத்திற்குப் பிறகு, பொது சேவை உதவியாளர் (ஓட்டுநர்) மற்றும் பொது சேவை உதவியாளர் (பொது) ஆகியோரின் பொறுப்புகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் பிரிவினர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட துறை சார்ந்த வாகனங்களை ஓட்டுவதிலும் அவற்றை முறையாகப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துவர்.

பொதுப் பிரிவினர் துறையின் தேவைகளுக்கு ஏற்ப பொதுவான ஆதரவுப் பணிகளை மேற்கொள்வர். எனினும், துறையின் தேவை மற்றும் ஓட்டுநர் திறன் தேர்வுகளின் அடிப்படையில் பொதுப் பிரிவினரையும் வாகனங்களை ஓட்டும் பணியில் ஈடுபடுத்த முடியும் என்று அமைச்சு விளக்கமளித்தது.

2027 வரவு செலவுத் திட்டத்தில் 400 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதிலும், அரசு மருத்துவமனைகளில் கடுமையான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பற்றாக்குறை நிலவுவதாக கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பெரித்தா ஹரியான் (Berita Harian) செய்தி வெளியிட்டிருந்தது.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே சுகாதார அமைச்சு இந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.