கோலாலம்பூர், டிச 23 - நேற்று காலை ஜாலான் உசாஹவான் 6 ஸ்தாப்பாக்கில் அவசர சேவைக்குச் சென்றிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்றிருந்த இரண்டு கார்களையும் 4 மோட்டார் சைக்கிள்களையும் மோதியது.
இந்த விபத்தில் 40 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், ஒரு பெண் மற்றும் 9 வயது சிறுமி உட்பட பலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர் என போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி முகமட் சம்சூரி முகமட் இசா தெரிவித்தார்.
பின்னர், அவர்கள் அனைவரும் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 43(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறும் அல்லது விசாரணைக்கு உதவ 03-2071 9999 என்ற எண்ணில் துன் எச்.எஸ். லீ போக்குவரத்து காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக 36 வினாடிகள் கொண்ட டேஷ்போர்டு கேமரா வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.


