ஷா ஆலாம் , அக் 31 : சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ், இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் தொற்றின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
அதையடுத்து, திட்டமிடப்பட்டிருந்த அரசு விழாக்களும் சடங்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என சிலாங்கூர் அரச அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சுல்தானின் தனிப்பட்ட மருத்துவர்களின் கூற்றுப்படி, அவருக்கு நேற்று காலை முதல் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்பட்டன.
பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களுடன் பழகியபோது அவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
தற்போது அவரது உடல்நிலை தேறி வந்தாலும், இன்னும் காய்ச்சல் நீடிப்பதால் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை முழுமையான ஓய்வு தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழா ஆட்சிக் கொண்டாட்டத்தை ஒட்டி நாளை நவம்பர் 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவிருந்த அரசு விருது வழங்கும் சடங்கும் ஒத்திவைக்கப்பட்டது.
அந்த சடங்கு நவம்பர் 7 -ஆம் தேதிக்கு (சனிக்கிழமை) அன்று மாற்றப்பட்டுள்ளது.







