அரசுப் பணி அனுபவமே பொதுச் சேவை நேர்மை குறித்த சிலாங்கூர் சுல்தானின் கண்டிப்பிற்கு காரணம்

25 அக்டோபர் 2026, 2:27 AM
அரசுப் பணி அனுபவமே பொதுச் சேவை நேர்மை குறித்த சிலாங்கூர் சுல்தானின் கண்டிப்பிற்கு காரணம்
அரசுப் பணி அனுபவமே பொதுச் சேவை நேர்மை குறித்த சிலாங்கூர் சுல்தானின் கண்டிப்பிற்கு காரணம்
அரசுப் பணி அனுபவமே பொதுச் சேவை நேர்மை குறித்த சிலாங்கூர் சுல்தானின் கண்டிப்பிற்கு காரணம்

கிள்ளான், அக் 24 : ஓர் அரசு ஊழியராகப் பெற்ற அனுபவத்தின் நேரடி வெளிப்பாடாக, பொதுச் சேவை துறையில் நேர்மை, திறன், ஒழுக்கம் மற்றும் நல்லாளுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ் வலியுறுத்தியிருக்கின்றார்.

சிலாங்கூர் பொதுச் சேவை ஆணையத்தின் தலைவர் டத்தோ ஹாரிஸ் காசிம் இதனைத் தெரிவித்தார்.

இந்தத் தனிப்பட்ட அனுபவத்தின் மூலம், அரசாங்க நிர்வாகத்தின் நுணுக்கங்களையும், மக்களுக்குச் சேவை செய்வதற்கான பொறுப்புகளையும் சுல்தான் மிகச் சரியாக உணர்ந்துள்ளார் என்று அவர் கூறினார்.

"சிலாங்கூர் சுல்தானாக அரியணை ஏறுவதற்கு முன்பு, மாண்புமிகு துவாங்கு பொது நிர்வாகத் துறையில் மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவர் சிலாங்கூர் மாநில அரசுச் செயலாளர் அலுவலகம், கோலாலம்பூர் மாவட்ட அலுவலகம் மற்றும் போலீஸ் படை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்."

"பொதுச் சேவையில் நேர்மை, திறன், ஒழுக்கம் மற்றும் நல்லாளுமை ஆகியவற்றை மாண்புமிகு துவாங்கு அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது, அரசுப் பணியில் அவர் பெற்ற அனுபவத்தின் மூலம் உருவான அக்கறையின் வெளிப்பாடாகும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள இஸ்தானா ஆலாம் ஷா அரண்மனையில், சுல்தானின் 25 ஆண்டுகால வெள்ளி விழா ஆட்சி நிறைவை ஒட்டி ஓய்வூ பெற்றவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் நடைபெற்ற ‘அரச தேநீர் விருந்து’ நிகழ்ச்சியில் சுல்தானுக்கு வாழ்த்துரை வழங்கி உரையாற்றியபோது ஹாரிஸ் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநில நிர்வாகத்தின் தரம் என்பது அங்குள்ள மனித வள மேம்பாட்டைச் சார்ந்தது என்பதால், தகுதி , வெளிப்படைத்தன்மை மற்றும் நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் தங்களின் நிர்வாகத் திறனை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

"நானும் சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்களும் துவாங்கு அவர்களின் கட்டளைகளையும் ஆலோசனைகளையும் ஒரு வழிகாட்டியாக ஏற்று, மாநிலத்திற்கும் மக்களுக்கும் கடமையாற்ற வேண்டும் என்பதை இந்த வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன்."

"ஒரு சிறந்த அரசு ஊழியர் என்பவர் வெறும் வேலைத் திறனை மட்டும் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை; மாறாக அவர்களின் நற்பண்பு, நேர்மையுடன் பொறுப்புகளை ஏற்கும் விதம், மக்களுக்கு வழங்கும் பணிவான சேவை மற்றும் மக்களின் நலனைக் காப்பதில் காட்டும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலமே மதிப்பிடப்படுகிறார்," என்றார்.

இதற்கிடையில், முன்னாள் மாநில அரசுச் செயலாளருமான ஹாரிஸ், 2001 நவம்பர் 22 என்பது சிலாங்கூரின் 9-ஆவது சுல்தானாக சுல்தான் ஷராபுதீன் அவர்கள் பொறுப்பேற்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்பதை நினைவு கூர்ந்தார்.

"கடந்த 25 ஆண்டுகால ஆட்சியில், சிலாங்கூர் மாநிலம் ஓர் ஆற்றல்மிக்க, வளமான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த மாநிலமாகத் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

துவாங்கு இந்த மாநிலத்தின் இறையாண்மையின் அரணாக விளங்கி வருகிறார்."

"இஸ்லாமிய சமயத்தின் கண்ணியத்தைப் பேணுவதிலும், பல்லின சமூகத்தின் இணக்கமான வாழ்விற்கும், மக்களின் நலனை உறுதி செய்வதற்கும் துவாங்கு அவர்கள் வழங்கும் கட்டளைகளும், ஆலோசனைகளும், கருத்துகளும் எப்போதும் மாநில நிர்வாகத்திற்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கின்றன," என்று அவர் பாராட்டினார்.

முன்னதாக, சுல்தான் ஷராபுதீன் 25 ஆண்டுகால ஆட்சி நிறைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்து தொடர் நிகழ்வுகளின் இறுதி நிகழ்ச்சியாக நேற்றைய அரச தேநீர் விருந்து அமைந்தது.

அந்த விழாவில் அரசு ஊழியர்கள், ஓய்வூ பெற்றவர்கள் , முதலீட்டாளர்கள் என சுமார் 1,500 விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.