கிள்ளான், அக் 25: சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ் -ஜின் 25 ஆண்டுகால வெள்ளி விழா ஆட்சி நிறைவை ஒட்டி, ஆறு பேருக்கு சிலாங்கூர் மாநிலத்தின் உயரிய விருதுகளை சுல்தான் வழங்கி சிறப்பித்தார்.
இஸ்தானா ஆலாம் ஷா அரண்மனையின் பாலாய்ருங் செரியில் இன்று அரச விருது வழங்கும் சடங்கு நடைபெற்றது.
இந்த சடங்கிற்கு , சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மாய்சூரி ஹாஜா நொராஷிகின், இளவரசர் தெங்கு அமீர் ஷா மற்றும் டத்தின் படுக்கா ஸ்ரீ அஃப்சா ஃபதினி டத்தோ அப்துல் அஜீஸ் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
ஆண்களுக்கு 'Dato’ Seri' மற்றும் பெண்களுக்கு 'Datin Paduka Seri' என்ற பட்டத்தை வழங்கும் மிக உயரிய எஸ்பிஎம்எஸ் (S.P.M.S.) விருதை நான்கு முக்கியப் பிரமுகர்கள் பெற்றனர்.
அரண்மனை அதிகாரி டத்தோ படுக்கா சையத் புத்ரிஸ் புத்ரா ஜமாலுல்லைல் சையத் அமீர் அபிடின் ஜமாலுல்லைல் இந்த விருதுப் பட்டியலில் முதலிடம் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து நாட்டின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோஃப், நாட்டின் தலைமை நீதிபதி துன் வான் அஹ்மாட் ஃபரிட் வான் சல்லே மற்றும் வெஸ்ட்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ ரூபன் எமிர் ஞானலிங்கம் அப்துல்லா ஆகியோருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.
மேலும், ஆண்களுக்கு 'Dato’ Setia' மற்றும் பெண்களுக்கு 'Datin Paduka Setia' என்ற பட்டத்தை வழங்கும் எஸ்எஸ்ஐஎஸ் (S.S.I.S.) விருதை அரச குடும்ப அதிகாரி டத்தோ ரிச்சர்ட் அலெக்சாண்டர் ஜான் கர்டிஸ் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் சட்ட ஆலோசகர் டத்தோ சலிம் சோயிப் ஆகிய இரு பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பாரம்பரியமிக்க அரச பதவி மற்றும் பட்டங்கள் சூட்டும் சடங்குகளும் நடைபெற்றன.
அதன்படி ராஜா டத்தோ ரேஸா அல்ஹாஜ் ராஜா டத்தோ ஜைப் ஷா அல்ஹாஜ்-ஜுக்கு 'எங்கு ஸ்ரீ படுக்கா டிராஜா' என்ற அரச பதவிப் பட்டமும்,
தெங்கு எஸ்ரிக் எஸ்ஸுடீன் தெங்கு ஆர்டி எஸ்ஃபாண்டியாரி அல்ஹாஜ் -ஜுக்கு, 'தெங்கு ஓராங் காயா மந்திரி டிராஜா' என்ற அரச பதவிப் பட்டமும் சூட்டப்பட்டது.
மலேசிய இருதயக் கழகத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அல்ஜாஃப்ரி டான்ஸ்ரீ அப்துல் மஜீத்திற்கு 'டத்தோ ஸ்ரீ மகாராஜா டிராஜா' என்ற சிறப்புப் பட்டமும் வழங்கப்பட்டது.
ராஜா லூமு காலம் தொட்டு கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியத்தின்படி, இந்தப் பட்டங்களைப் பெற்றவர்கள் சுல்தானுக்குத் தங்களின் விசுவாச உறுதிமொழியை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சுல்தானிடமிருந்து முஸ்லிம் பிரமுகர்கள் பாரம்பரிய கிரிஸ் வாளையும், முஸ்லிம் அல்லாத பிரமுகர்கள் நீண்ட வாளையும் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக, அரண்மனை மைதானத்தில் சிலாங்கூர் மாநிலப் பண் இசைக்கப்பட, சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சியைக் குறிக்கும் வகையில் 25 பீரங்கி குண்டுகள் முழங்க, அரச மலேசிய கடற்படையினரின் கம்பீரமான அணிவகுப்பைச் சிலாங்கூர் சுல்தான் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.












