காஜாங், அக் 31: கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, காஜாங் நகராண்மைக் கழகத்தின் (MPKj) "வாகனமில்லா காலைப் பொழுது" (Pagi Tanpa Kenderaan) திட்டம் இன்று காலை காஜாங் அரங்கின் சதுக்கத்தில் மீண்டும் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சி நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
பல்வேறு பொழுதுபோக்கு, சமூக நடவடிக்கைகள் மூலம் காஜாங் நகரத்தை மீண்டும் சுறுசுறுப்பாக்குவதே இந்த திட்டத்தை மறுசீரமைத்ததன் முக்கிய நோக்கம் என்று காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் நஸ்லி முகமட் தாயிப் தெரிவித்தார்.
"காஜாங்கில் முதல்முறையாக காஜாங் நகராண்மைக் கழகத்தால் வாகனமில்லா தினம் 2017-ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, உடற்பயிற்சி, ஜும்பா , அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுடன் இந்த திட்டத்தை காஜாங் நகராண்மைக் கழகம் மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது," என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்காக மொத்தம் 1,000 இலவச சட்டைகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால் முன்கூட்டியே பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கே அவை அனைத்தும் முழுமையாக வழங்கி தீர்ந்துவிட்டன என்றாரவர்.
இந்த காஜாங் நகராண்மைக் கழகத்தின் வாகனமில்லா காலைப் பொழுது திட்டம், அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும் தேசிய அளவிலான சிறு வியாபாரிகள் மற்றும் விற்பனை விழாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு சுமார் 300 சிறு வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு எவ்வித அனுமதி கட்டணமும் இன்றி அரங்கின் வளாகத்தில் தங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாள் விழாவில் மொத்தம் 50,000 பார்வையாளர்கள் வருவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








