ஷா ஆலாம், அக்.16 – சிலாங்கூர், காஜாங் தாமான் விஸ்தா முத்தியாரா குடியிருப்புப் பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அவற்றைப் பிடிப்பதற்குக் கூடுதல் பொறிகளை வைக்க வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை (PERHILITAN) நடவடிக்கை எடுக்கவுள்ளது.
காட்டுப்பன்றிகளின் தொல்லையால் குடியிருப்பாளர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் புகார்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் தெரிவித்தார்.

தம்முடன் சிலாங்கூர் மாநில பெர்ஹிலித்தான் இயக்குநர் ரஹ்மா இலியாஸ் நேரில் சென்று அப்பகுதியை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, கூடுதல் பொறிகளை வைப்பது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
குடியிருப்புப் பகுதிக்குப் பின்னால் அமைந்துள்ள வனப்பகுதி காட்டுப்பன்றிகளின் வாழ்விடமாக இருக்கலாம் என நம்பப்படுவதாக டேவிட் கூறினார். இரவு நேரங்களில் உணவு தேடி வெளியே வரும் அவை, காலையில் மீண்டும் வனப்பகுதிக்குத் திரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் குடியிருப்பாளர்களுக்கு இடையூறாக இருப்பதுடன், அவை மனிதர்களைத் துரத்தும் அல்லது முட்டித் தாக்கும் ஆற்றல் கொண்டவை என்பதால் மக்களின் பாதுகாப்பு குறித்த கவலையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குடியிருப்புகளைச் சுற்றிலும் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், காட்டுப்பன்றிகள் அவற்றைக் கடந்து உள்ளே நுழைந்து மக்களின் பயிரிடும் பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன.
காட்டுப்பன்றிகள் குடியிருப்புக்குள் நுழைவதைத் தடுக்க மேலும் வலுவான பாதுகாப்பு வேலிகளை அமைக்க அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சுமார் 70,000 முதல் 80,000 ரிங்கிட் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலி அமைக்கும் திட்டத்திற்குத் தேவையான நிதியில் ஏறத்தாழ பாதித் தொகையை குடியிருப்பாளர்கள் ஏற்கெனவே திரட்டியுள்ளதாக டேவிட் தெரிவித்தார். இருப்பினும், இன்னும் 30,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான பற்றாக்குறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும், காட்டுப்பன்றிகளின் தொல்லைக்கு நீண்டகாலத் தீர்வைக் காண்பதற்கும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.







