காஜாங் எம்ஆர்டி பாதையில் மின்கம்பி திருட முயற்சி; ரயில் சேவையில் தாமதம்

16 அக்டோபர் 2026, 4:21 AM
காஜாங் எம்ஆர்டி பாதையில் மின்கம்பி திருட முயற்சி; ரயில் சேவையில் தாமதம்

ஷா ஆலாம், அக்.16 – மின்கம்பிகளைத் திருட முயன்றது மற்றும் ரயில் தண்டவாளப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது போன்ற சம்பவங்களால் இன்று காலை காஜாங் எம்ஆர்டி பாதையில் ரயில் சேவைகள் தாமதமடைந்தன.

பிலியோ டாமான்சாரா மற்றும் பூசாட் பண்டார் டாமான்சாரா ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ரேபிட் கேஎல் தெரிவித்தது.

இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இச்சம்பவம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ரயில் பாதைப் பகுதியில் மின்சாரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது.

சந்தேக நபர்களைக் கண்டறிந்து தேடுவதற்காக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், பாதுகாப்பு கருதி மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ரேபிட் கேஎல் தெரிவித்தது.

பயணிகள், பணியாளர்கள் மற்றும் தண்டவாளப் பகுதியில் உள்ள அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், ரயில் சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதும் இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் சோதனைகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காலை 6.32 மணிக்கு மின்சாரம் மீண்டும் வழக்கத்திற்கு திரும்பியதாக ரேபிட் கேஎல் தெரிவித்தது.

சோதனை நடவடிக்கைகள் நடைபெற்ற காலப்பகுதியில், பயணிகள் பாதுகாப்பாகத் தங்களது பயணங்களைத் தொடர்வதற்கு மாற்று ரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ன.

மேலும், மின்கம்பித் திருட்டுச் சம்பவங்களைத் தாங்கள் மிகக் கடுமையாகக் கருதுவதாக ரேபிட் கேஎல் வலியுறுத்தியது.

இத்தகைய சம்பவங்கள் ரயில் சேவைகளுக்குத் தடையை ஏற்படுத்துவதுடன், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை உருவாக்கக்கூடும் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரேபிட் கேஎல் தெரிவித்தது.

மலேசியக் காவல்துறையுடன் (PDRM) தொடர்ந்து ஒத்துழைத்து, விசாரணைகளுக்கு உதவுவதுடன் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.