ஷா ஆலாம், நவ 9 : காஜாங், தாமான் ஜாஸ்மினில் உள்ள 8 வீடுகளின் குடியிருப்பாளர்கள், அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காஜாங்கில் பெய்த பலத்த மழையின் காரணமாக, அக்குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குப் பின்னால் இருந்த ஒரு பகுதி சரிந்து விழுந்ததாக, பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷஹ்ரெட்சான் ஜோஹான் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தால் குடியிருப்பாளர்களுக்கு எந்தவிதக் காயங்களோ, அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக எந்தச் சேதமோ ஏற்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , அங்குள்ள எட்டு வீடுகளின் குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுரை வழங்கப்பட்டதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குப் புகலிடம் அளிப்பதற்காக தாமன் ஜாஸ்மின் தேசியப் பள்ளியில் ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்களது உறவினர்களின் வீடுகள் அல்லது மாற்று இடங்களில் தங்குவதற்கே விருப்பம் தெரிவித்துள்ளதால், இந்த நிவாரண மையத்தில் தங்கிப் பாதுகாப்புப் பெற வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை என்று ஷஹ்ரெட்சான் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் தற்போதைய நிலைமையைக் கேட்டறிவதற்காக, காஜாங் மாநில சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதி கைருல் அமாலினுடன் இணைந்து ஷஹ்ரெட்சான் ஜோஹான் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் சிலருக்கு காஜாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் தற்காலிக ஓட்டல் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மேலும் மோசமடையாமல் தடுப்பதற்காக காஜாங் நகராண்மைக் கழகம் (MPKj) சரிவுப் பகுதியில் தார்பாய் (Canvas) போடும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காஜாங் நகராண்மைக் கழகத்திடமிருந்து முழுமையான தொழில்நுட்ப அறிக்கையைப் பெறவுள்ளதாக ஷஹ்ரெட்சான் ஜோஹான் மேலும் தெரிவித்தார்.







