பெட்டாலிங் ஜெயா, அக் 30 : பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 100, பி40 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி பண்டிகை கால மகிழ்ச்சியைக் கொண்டு சேர்ப்பதற்காக, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் 30,000 ரிங்கிட் நிதியுதவியை ஒதுக்கியது.
பண்டிகை கால முன்னேற்பாட்டுச் செலவுகளைச் சமாளிப்பதற்கும் தங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் ஏதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 300 ரிங்கிட் ரொக்கப்பணம் வழங்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத் தலைவர் டத்தோ முகமட் யாசித் சைரி தெரிவித்தார்.
இந்த உதவி மக்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், இ-காசே (eKasih) தரவுத்தளத்தின் மூலமாக தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று பிஜே அரேனா (Arena PJ) விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி பண்டிகை கால நிதியுதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு டத்தோ முகமட் யாசித் உரையாற்றினார்.
" சில குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவின சவால்களை நாங்கள் புரிந்துக் கொண்டுள்ளோம்; இந்த உதவி அவர்களின் நிதிச் சுமையைக் குறைத்து தீபாவளிக்குத் தயாராக உதவும் என்று நம்புகிறோம் " என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, உடனடித் தேவைகளுக்கு உதவி வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் கவனம் செலுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.
கஷ்ட காலங்களில் மட்டும் உதவி வழங்கும் அணுகுமுறையிலிருந்து மாறி, மக்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றிக் கொள்பவர்களாக மாற்றுவதிலும் மாநகராட்சி கவனம் செலுத்த விரும்புவதாக யாசித் தெரிவித்தார்.








