ஷா ஆலாம், நவ 8 - தீபாவளி என்றாலே புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகள், வீடுகளை அலங்கரிக்கும் அகல் விளக்குகள் எனக் கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த ஒளித் திருவிழாவின் பெயரிலேயே ஒரு சுவாரசியமான விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது என்ன தெரியுமா? தீபாவளியா அல்லது தீவாளியா?
பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், வடஇந்திய மற்றும் தென்னிந்திய மரபுகளிலும் இத்திருவிழாவிற்கான முறையான பெயர் தீபாவளி என்பதே என்கிறார் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் கணேசன் தங்கவேலு.
தீமையை வென்று நன்மை பிறந்த நாள்!
தீபாவளி என்பது வெறும் விளக்கேற்றி மகிழும் பண்டிகை மட்டுமல்ல. அறியாமை எனும் இருளை அகற்றி, நன்மையும் தர்மமும் வெற்றி பெறுவதைக் கொண்டாடும் சிறப்பு நாளாகும்.
தமிழ் மாதமான ஐப்பசியில் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று தீபாவளி கொண்டாடப்படுவதாகக் கூறும் கணேசன், நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணரும் அவரது துணைவியார் சத்தியபாமாவும் இணைந்து வதம் செய்த நாளை நினைவுகூரும் வகையில் இத்திருவிழா அமைந்துள்ளதாக விளக்கினார்.
அதேவேளை, வடஇந்திய மரபில் 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக் கொண்டு, இராவணனை வதம் செய்த பின்னர் அயோத்திக்குத் திரும்பிய ராமர் மற்றும் சீதையை வரவேற்கும் வகையிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
மேலும், செல்வம், வளம் மற்றும் செழிப்பின் அடையாளமாக விளங்கும் மகாலட்சுமி தேவிக்கும் இந்நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
குஜராத்தியர்களுக்குப் புத்தாண்டும் தீபாவளியே!
தீபாவளி கொண்டாட்டத்தில் மற்றுமொரு சுவாரசியமான அம்சமும் உள்ளது. குஜராத்தியர்களுக்கு இத்திருவிழா புத்தாண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
ஸ்ரீ லட்சுமி நாராயணன் ஆலயத் தலைவர் ராஜேஷ் கமானி கூறுகையில், தீபாவளிக்கு மறுநாள் குஜராத்தியர்கள் 'பெஸ்து வராஸ்' (Bestu Varas) எனப்படும் குஜராத்தி புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.
இதற்கான கொண்டாட்டங்கள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே 'தன்தேரஸ்' (Dhanteras) வழிபாட்டுடன் தொடங்குகின்றன. அன்றைய தினம் மகாலட்சுமியை வழிபடுவதுடன், வீட்டில் செல்வமும் வளமும் பெருக வேண்டும் என்ற நம்பிக்கையில் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதும் வழக்கமாக உள்ளது.
புத்தாண்டு காலையில் உப்பு வாங்குவதும் குஜராத்தியர்களின் மற்றொரு தனித்துவமான மரபாகும். குஜராத்தி மொழியில் 'சப்ராஸ்' (Sabras) எனப்படும் உப்பு, அனைத்து நன்மைகளையும் குறிக்கும் என்பதால் அதனை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பது அவர்களின் நம்பிக்கை.
அதேபோல், வியாபாரம் செய்பவர்கள் புதிய நிதியாண்டைத் தொடங்கும் வகையில் கணக்குப் புத்தகங்களுக்கும் சிறப்புப் பூஜை செய்வர். 'சோப்டா பூஜன்' (Chopda Pujan) எனப்படும் இச்சடங்கில் மகாலட்சுமி மற்றும் விநாயகரை வழிபட்டு, புதிய கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் 'சுப் லாப்' (Shubh Labh) எனப்படும் மங்களகரமான லாபம் என்ற வார்த்தையையும் சுவஸ்திக் சின்னத்தையும் வரைவது வழக்கம்.
தீபாவளியா, தீவாளியா? பெயருக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம்!
தென்னிந்தியர்களிடையே 'தீபாவளி' என்ற பெயர் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், வடஇந்தியர்களிடையே 'தீவாளி' என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், ஸ்ரீ லட்சுமி நாராயணன் ஆலயத்தின் துணைத் தலைவர் அனில் சர்மா கூறுகையில், இத்திருவிழாவின் பெயர் சமஸ்கிருதச் சொல்லான 'தீபாவளி' என்பதிலிருந்து உருவானதாகும்.
இதில் 'தீபம்' என்பது விளக்கையும், 'ஆவளி' என்பது வரிசையையும் குறிக்கிறது. அதாவது, வரிசையாக ஏற்றப்படும் விளக்குகளைக் குறிப்பதே தீபாவளி என்ற சொல்லின் பொருளாகும்.
வடஇந்தியாவில் காலப்போக்கில் இச்சொல் சுருக்கப்பட்டு 'தீவாளி' எனப் பயன்படுத்தப்பட்டாலும், அதன் அடிப்படைச் சொல்லான தீபாவளியே பொருத்தமான பெயர் என்றார் அவர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், 1951ஆம் ஆண்டு விடுமுறைச் சட்டத்தின் முதல் அட்டவணையிலும் 'Deepavali' என்ற பெயரே அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளதாக கணேசன் குறிப்பிட்டார்.
தென்னிந்தியாவிலும் வடஇந்தியாவிலும் கொண்டாட்டங்கள் எப்படி மாறுபடுகின்றன?
ஒரே பண்டிகையாக இருந்தாலும், கொண்டாடும் முறை, சடங்குகள் மற்றும் கால அளவில் இரு மரபுகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன.
தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஒருநாள் கொண்டாட்டமாக அமையும் தீபாவளி, அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் 'எண்ணெய்க் குளியல்' அல்லது 'கங்கா ஸ்நானம்' மூலம் தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிதல், பெரியவர்களிடம் ஆசி பெறுதல், வீட்டில் பலகாரங்கள் தயாரித்தல், கோலமிடுதல், அகல் விளக்குகள் ஏற்றுதல் மற்றும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுதல் என குடும்பத்தினருடன் பண்டிகை களைகட்டுகிறது.
ஆனால், வடஇந்திய மரபில் தீபாவளி ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
முதல் நாளான தன்தேரஸ் அன்று மகாலட்சுமியை வழிபடுவதுடன் தங்கம், வெள்ளி அல்லது புதிய பாத்திரங்கள் வாங்குவது சில குடும்பங்களில் வழக்கமாக உள்ளது.
இரண்டாவது நாளான நரக சதுர்த்தசி, 'சோட்டி தீவாளி' என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் காளி தேவியை வழிபட்டு பயம், துன்பம் மற்றும் எதிர்மறை சக்திகள் நீங்கப் பிரார்த்தனை செய்கின்றனர்.
மூன்றாவது நாளான தீபாவளியே முக்கியக் கொண்டாட்ட நாளாகும். மகாலட்சுமியை வழிபட்டு வீடுகள் முழுவதும் விளக்குகள் ஏற்றி, ராமர் மற்றும் சீதையின் அயோத்தி வருகையையும் நினைவுகூருகின்றனர்.
நான்காவது நாளில் கிருஷ்ணர் கோவர்த்தன் மலையைத் தூக்கி மக்களைக் காப்பாற்றிய நிகழ்வை நினைவுகூரும் வகையில் 'கோவர்த்தன பூஜை' நடைபெறுகிறது.
அன்றைய தினம் கிருஷ்ணருக்குப் படைப்பதற்காகப் பல்வேறு உணவு வகைகளைக் கொண்டு மலைபோல் அலங்கரிக்கும் 'அன்னகூட்' (Annakut) வழிபாடு ஆலயங்களில் சிறப்பாக நடைபெறுவதாக ராஜேஷ் தெரிவித்தார்.
ஐந்தாவது மற்றும் இறுதி நாளான 'பாய் தூஜ்' அல்லது 'பாய் டிக்கா' உடன்பிறப்புகளுக்கு இடையிலான அன்பையும் பாசத்தையும் போற்றும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் நெற்றியில் சிவப்பு நிறத் திலகமிட்டு, அவர்களின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். பதிலுக்கு சகோதரர்களும் தங்களது சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்கி, அவர்களை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பதாக உறுதியளிக்கின்றனர்.
பெயர்கள் வேறுபட்டாலும் கொண்டாட்டத்தின் நோக்கம் ஒன்றே!
தீபாவளி, தீவாளி எனப் பெயர்கள் மாறினாலும், இத்திருவிழாவின் அடிப்படை நோக்கம் ஒன்றுதான். இருளை அகற்றி ஒளியைப் பரப்புவதும், தீமையை வென்று நன்மையை நிலைநாட்டுவதும், குடும்பத்தினருடனும் சமூகத்தினருடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும்தான் அதன் சிறப்பு.
ஆகவே, 'ஹேப்பி தீவாளி' என்று வாழ்த்தினாலும் அது தவறல்ல. இருப்பினும், மொழி மற்றும் மரபின் அடிப்படையில் 'இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்' என்பதே பொருத்தமான வாழ்த்தாக அமைகிறது.







