ஷா ஆலாம், அக் 30 - தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5 முதல் 13 வரை பொதுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரிகள், இணையம் வழி அல்லது கலப்பு ( இணையம் அல்லது நேரடி) முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
இதன் வழி, இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கற்பித்தல் ஊழியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளிப் பண்டிகையைத் தங்களின் குடும்பத்தினருடன் கொண்டாட முடியும் என்று உயர் கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
"இருப்பினும், கற்றல் நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதிச் செய்ய, அந்தந்த கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத் தேவைகள் மற்றும் பொருத்தத்திற்கு ஏற்பவே இது நடைமுறைப்படுத்தப்படும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மலேசியாவின் பல்லின சமூகத்தில் ஒற்றுமைக்கு அடித்தளமாக விளங்கும் கலாச்சார மற்றும் மதப் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் அதே வேளையில், உயர் கல்விச் சமூகத்தின் நலனில் அமைச்சிற்கு உள்ள அக்கறையை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.







