தீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம்: 11 அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிடப்பட்டன

30 அக்டோபர் 2026, 6:30 AM
தீபாவளி விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம்: 11 அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிடப்பட்டன

கோலாலம்பூர், அக்.30 – தீபாவளியை முன்னிட்டு, அத்தியாவசியப் பொருட்களில் விலையைக் கட்டுபடுத்தும் திட்டம் (SHMMP) எதிர்வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ளது.

கடந்த ஆண்டு ஒன்பது வகையான பொருட்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட நிலையில், இவ்வாண்டு சீன உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய்ப்பால் ஆகிய இரண்டு புதிய பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதனை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பெரும்பாலான பொருட்களின் விலைகள் நிலையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, தீபகற்ப மலேசியாவில் ஐந்து பொருட்களின் அதிகபட்ச விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முழுத் தேங்காய், துருவிய தேங்காய், பெரிய வெங்காயம், இந்தியச் சிறிய வெங்காயம் மற்றும் அவுஸ்திரேலியப் பருப்பு ஆகியவை அடங்கும்.

தீபாவளி அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிவிக்கும் செய்தியாளர் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலில் இருக்கும் ஏழு நாட்களிலும் கட்டுப்பாட்டுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை வியாபாரிகள் முறையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த, அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் முக்கிய இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொருட்களுக்கு வியாபாரிகள் கட்டாயம் இளஞ்சிவப்பு நிற விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி பொதுமக்களுக்குத் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறும் வியாபாரிகள் மீது 2011ஆம் ஆண்டின் விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அர்மிசான் எச்சரித்தார்.

தீபாவளி 2026 விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இடம்பெறும் 11 அத்தியாவசியப் பொருட்கள்:

  1. பெரிய வெங்காயம்

  2. இந்தியச் சிறிய வெங்காயம்

  3. இந்தியச் சிறிய வெங்காயம் (ரோஸ் வகை)

  4. சிவப்பு மிளகாய்

  5. இறக்குமதி செய்யப்பட்ட எலும்புடன் கூடிய ஆட்டிறைச்சி

  6. அவுஸ்திரேலியப் பருப்பு

  7. முழுத் தேங்காய்

  8. துருவிய தேங்காய்

  9. தேங்காய்ப்பால் (புதிய சேர்க்கை)

  10. தக்காளி

  11. சீன உருளைக்கிழங்கு (புதிய சேர்க்கை)

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.