ஷா ஆலாம், செப்.26 – நெதர்லாந்துடன் குறைக்கடத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் புதிய வாய்ப்புகளை சிலாங்கூர் ஆராய்ந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சிலாங்கூர் மாநிலப் பிரதிநிதிகள் இன்று காலை நெதர்லாந்தின் ஐன்ட்ஹோவனில் உள்ள ஹை டெக் கேம்பஸ் வளாகத்தில் செயல்படும் Axelera AI நிறுவனத்துக்கு வருகை தந்தனர்.
இந்த மாநிலக் குழுவுக்கு முதலீட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் தலைமை தாங்கினார்.

அவருடன் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (SIDEC), மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (MIDA) பிராங்க்பர்ட் அலுவலகம் மற்றும் Invest Selangor ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
Axelera AI நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் சியாமக் நசாரி, செயற்கை நுண்ணறிவுக்கான குறைக்கடத்தி தொழில்நுட்பம் மற்றும் அந்நிறுவனம் உருவாக்கி வரும் AI முடுக்கத் தீர்வுகள் குறித்து சிலாங்கூர் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததாக இங் சீ ஹான் தெரிவித்தார்.
Axelera AI நிறுவனம் குறைந்த அளவு மின்சக்தியைப் பயன்படுத்தும் AI முடுக்கத் தீர்வுகளை உருவாக்கி வருகிறது.
இதில் Edge AI பயன்பாட்டுக்கான Metis தொழில்நுட்பமும், நிறுவனங்கள் மற்றும் தரவு மையங்களின் பயன்பாட்டுக்காக ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டு வரும் புதிய தளமும் அடங்கும்.
மேலும், SIDEC நிர்வகித்து வரும் Malaysia Semiconductor IC Design Park உடன் இணைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார்.
கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான முக்கிய இணைப்புப் பகுதியாக மலேசியா, குறிப்பாக சிலாங்கூர் அமைந்திருப்பது, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களை ஆசியாவின் முக்கிய சந்தைகளுடன் இணைப்பதில் நாட்டுக்கு சாதகமான நிலையை வழங்குவதாக இங் சீ ஹான் குறிப்பிட்டார்.

இதனிடையே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள Selangor AI & Semiconductor Summit 2026 மாநாட்டில் பங்கேற்குமாறு நெதர்லாந்தைச் சேர்ந்த மூலோபாயப் பங்காளிகளையும் சிலாங்கூர் மாநிலக் குழு அழைத்துள்ளது.
சிலாங்கூரின் சர்வதேச வலையமைப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன், தொழில்நுட்பத் துறையில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.
மாநிலத்தின் குறைக்கடத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையை மேலும் வலுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்தப் பயணமும் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







