முதலாம் ஆண்டு மாணவர் விவகாரம்: மழலையர் பள்ளி நடத்துநர்கள், பெற்றோருடன் கல்வி அமைச்சு தொடர்ந்து கலந்துரையாடல்

19 பிப்ரவரி 2026, 1:48 AM
முதலாம் ஆண்டு மாணவர் விவகாரம்: மழலையர் பள்ளி நடத்துநர்கள், பெற்றோருடன் கல்வி அமைச்சு தொடர்ந்து கலந்துரையாடல்

ஜோர்ஜ்டவுன், பிப் 19: ஆறு வயதில் முதலாம் ஆண்டில் சேர்வது தொடர்பான விவகாரங்கள் குறித்து தனியார் மழலையர் பள்ளி மற்றும் பாலர் பள்ளி நடத்துநர்கள், பெற்றோருடன் கல்வி அமைச்சு தனது கலந்துரையாடல் அமர்வுகளைத் தொடரும்.

 இது தொடர்பான சில அம்சங்களில் இன்னும் திருப்தியடையாத தனியார் மழலையர் பள்ளி நடத்துநர்கள் உட்பட எந்தத் தரப்பினரிடமிருந்தும் எழுப்பப்படும் கருத்துக்களை அமைச்சு திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

 தீர்வு காணப்படாதப் பிரச்சனைகள் இன்னும் இருந்தால், ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான விளக்கம் அளிப்பதை உறுதிசெய்ய, அமைச்சு அடுத்தடுத்த கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தத் தயங்காது என்று அவர் கூறினார். 

"நடத்தப்பட்ட கலந்துரையாடல் அமர்வுகளின் போது எழுப்பப்பட்ட அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். இன்னும் நிலுவையில் உள்ள சிக்கல்கள் இருந்தால், நாங்கள் மீண்டும் அந்த அமர்வை நடத்துவோம்," என்று பாயான் பாருவில் உள்ள விஸ்மா பிகேஆரில் நடைபெற்ற பினாங்கு பிகேஆர் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

 இந்த கொள்கையை வரவேற்று அதன் செயலாக்கத்திற்கு ஆதரவளித்த தனியார் மழலையர் பள்ளி நடத்துநர்களுக்கு அமைச்சு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். அதேவேளையில், ஆறு வயது மாணவர்களை முதலாம் ஆண்டில் சேர்ப்பது கட்டாயமில்லை, அது ஒரு விருப்பத் தேர்வே என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

"தங்கள் பிள்ளைகள் முதலாம் ஆண்டிற்குள் நுழையத் தயாராக இருப்பதாகக் கருதும் பெற்றோர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. மற்றவர்கள் வழக்கம் போல் தொடரலாம்," என்று அவர் கூறினார்.

 குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெற்றோரின் கவலைகள் குறித்து கருத்துரைத்த ஃபத்லினா, அரசாங்கப் பள்ளிகளில் உள்ள பாலர் பள்ளிகள் வழக்கம் போல் ஆறு வயது குழந்தைகளைத் தொடர்ந்து ஏற்கும் என்றும், அவர்களை முன்கூட்டியே முதலாம் ஆண்டிற்கு அனுப்ப எந்தக் கட்டாயமும் இல்லை என்றும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.