அம்பாங் ஜெயா, அக்.29 – மலேசிய வன ஆராய்ச்சி நிறுவனத்தின் (FRIM) வனப் பூங்கா கடந்த ஆண்டு யுனெஸ்கோ உலக மரபுத் தல அங்கீகாரத்தைப் பெற்றது.
அதை தொடந்து சிலாங்கூரில் மேலும் பல இயற்கைச் செல்வங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத்தர மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.
இதனை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மாநிலம் வேகமாக வளர்ச்சியடைந்து வந்தாலும், அதன் இயற்கை வளங்களைப் பாதுகாத்து, நிலையான முறையில் நிர்வகிப்பது அவசியமாகும். இது மாநில மக்களின் நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது என அமிருடின் வலியுறுத்தினார்.
“மலேசிய வன ஆராய்ச்சி நிறுவனத்தின் சிலாங்கூர் வனப் பூங்கா (FRIM-FPS) யுனெஸ்கோ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அதேபோன்று, சபாக் பெர்னாமில் நாம் உருவாக்கி வரும் உயிர்க்கோளப் பகுதியும் அந்த அங்கீகாரத்தைப் பெறும் என நம்புகிறோம்.
யுனெஸ்கோ அங்கீகாரத்தைப் பெறுவதில், குறிப்பிட்ட ஓர் இடத்தின் தனித்துவமான இயற்கை அம்சங்களும் சிறப்பம்சங்களும் முக்கியப் பங்கு வகிப்பதாக அமிருடின் தெரிவித்தார்.

“இங்கு நம்மிடம் குவார்ட்ஸ் மலைத்தொடர் உள்ளது. அதன் நீளம் மட்டுமன்றி, அதன் தனித்துவமான இயற்கை அமைப்பும் உயரிய மதிப்பும் அதனைச் சிறப்புமிக்கதாக ஆக்குகின்றன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோம்பாக்–உலு லங்காட் (GHL) புவியியல் பூங்காவின் 2026ஆம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டு நிகழ்வை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோம்பாக்–ஹுலு லங்காட் புவியியல் பூங்காவின் மறுமதிப்பீடு அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த மதிப்பீட்டின் மூலம், 2022ஆம் ஆண்டு பெற்ற தேசிய புவியியல் பூங்கா அந்தஸ்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான தகுதி அந்தப் பகுதிக்கு உள்ளதா என்பது ஆராயப்படுகிறது.
தற்போது மலேசியாவில் மொத்தம் ஆறு யுனெஸ்கோ உலக மரபுத் தலங்கள் உள்ளன. அவற்றில் நான்கு கலாச்சார மரபுத் தலங்களாகவும், இரண்டு இயற்கை மரபுத் தலங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் FRIM-FPS வனப் பூங்காவும் அடங்குகிறது.

பிரான்ஸின் பாரிஸில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற 47ஆவது உலக மரபுத் தலக் குழுக் கூட்டத்தின்போது, FRIM-FPS அதிகாரபூர்வமாக யுனெஸ்கோ உலக மரபுத் தலப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
முன்னர் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலப்பரப்பில் மீண்டும் உருவாக்கப்பட்ட வெப்பமண்டலக் காடாக இந்த வனப் பூங்கா திகழ்கிறது.
பெருமளவிலான நிலப்பரப்பில் வனச் சூழலமைப்பை மீட்டெடுத்து, இயற்கை வளங்களைப் புதுப்பிக்க முடியும் என்பதற்கான முன்னுதாரணமாகவும் இது விளங்குகிறது.







