
ஷா ஆலாம், அக். 28 — இவ்வாண்டின் சிலாங்கூர் மாநில இந்தியத் தொழில்முனைவோருக்கான உபகரண உதவித் திட்டத்தின் (ஐ-சிட்) கீழ் உதவிகளை வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதுவரை மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் உதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இறுதியாக கோம்பாக் மாவட்டத்தில் எதிர்வரும் அக்டோபர் 29ஆம் தேதி உதவிகள் வழங்கப்படவுள்ளன.
சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம் 2026 தொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில்முனைவோரின் வணிகத் திறன், உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என விளக்கினார்.
தொழில்முனைவோரின் தேவைகளுக்கு ஏற்ற வணிக உபகரணங்களை வழங்குவதன் மூலம், அவர்களின் தொழிலை மேம்படுத்தவும், வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இத்திட்டம் உதவும் என்றார் அவர்.
மேலும், எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்திலும் ஐ-சிட் திட்டம் இடம்பெறவுள்ளது. அன்றைய நிகழ்ச்சியின்போது உதவி பெறும் தொழில்முனைவோருக்குக் காசோலை மாதிரிகள் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளதாகப் பாப்பராய்டு தெரிவித்தார்.
இந்தியச் சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் சிலாங்கூர் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார்.

இதற்கிடையில், இவ்வாண்டு மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆலயங்களுக்கு முதன்முறையாகச் சிறப்பு அங்கீகாரம் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பாப்பாராய்டு அறிவித்தார்.
இந்து சமய மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதிலும், அவர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மரபுரிமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதிலும் ஆலயங்கள் ஆற்றிவரும் பங்களிப்புகளைப் பாராட்டும் நோக்கில் இந்த அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இதுவரை பதிவு செய்யப்படாத ஆலய நிர்வாகங்களும் தங்களது பதிவு நடவடிக்கைகளை முழுமைப்படுத்தி, சம்பந்தப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படுவதை ஊக்குவிப்பதும் இம்முயற்சியின் மற்றொரு நோக்கமாகும் என்றார் அவர்.
குறிப்பாக, நிலம் தொடர்பான விவகாரங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்களின் (PBT) நிபந்தனைகள் உள்ளிட்ட தொடர்புடைய விதிமுறைகளை ஆலய நிர்வாகங்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த இந்த திட்டம் ஊக்கமளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, 2026ஆம் ஆண்டு சுக்மா போட்டிகளில் பங்கேற்ற சிலம்பம் மற்றும் கபடி சங்கங்களுக்கும் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாகப் பாப்பாராய்டு கூறினார்.
கலாச்சாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் அந்த சங்கங்கள் ஆற்றிய பங்களிப்புகளையும், போட்டிகளில் அவை பங்கேற்றதையும் பாராட்டும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
இந்தியச் சமூகத்தின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு பல்வேறு தரப்பினர் ஆற்றிவரும் பங்களிப்புகளை அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.

‘ஒற்றுமையின் ஒளி, வளமான சிலாங்கூர்’ (Cahaya Perpaduan, Selangor Sejahtera) என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம், எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி டத்தாரான் கிள்ளான் @ பாடாங் செட்டி மைதானத்தில் இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.









