செப்பாங், அக். 10 – குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் உட்பட சிறு வணிகர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்தி வருமானத்தை அதிகரிக்க சிலாங்கூர் அரசு இவ்வாண்டு சுமார் RM3 மில்லியனைச் செலவிட்டுள்ளது.
சிலாங்கூர் புளூபிரிண்ட் (Blueprint Selangor) உபகரண உதவித் திட்டம் மற்றும் இந்தியத் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் ஐ-சீட் (i-SEED) ஆகியவைக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டது என வறுமை ஒழிப்பு துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
செப்பாங் பகுதியில் மட்டும் 32 தொழில்முனைவோருக்கு உபகரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு சுமார் RM200,000 முதல் RM300,000 வரை இருக்கும் என்றும் பாப்பாராய்டு கூறினார்.

இவர்களில் 19 பேர் புளூபிரிண்ட் சிலாங்கூர் திட்டத்தின் கீழும், மேலும் 13 பேர் ஐ-சீட் திட்டத்தின் கீழும் உதவிகளைப் பெற்றுள்ளனர்.
பயனாளிகளுக்கு ஐஸ்கிரீம் தயாரிக்கும் இயந்திரங்கள், சமையல் அடுப்புகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்விரு திட்டங்களும் 2027ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட பாப்பாராய்டு, அடுத்த கட்டமாக உதவிகளைப் பெறக்கூடிய புதிய பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினர் லூய் கியான் கியோங், தமது தொகுதியில் உள்ள மக்கள் சேவை மையங்களுக்கு புளூபிரிண்ட் , ஐ-சீட் உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்களுக்காக அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்து வருவதாகக் கூறினார்.
விண்ணப்பதாரர்களின் உண்மையான தேவைகளை நேரடியாகச் சென்று மதிப்பீடு செய்வதற்குத் தமது தரப்பு தயாராக இருப்பதாகவும், பரிசீலனைக்காக விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் லூய் தெரிவித்தார்.
எனினும், உதவிகளுக்கு இறுதி ஒப்புதல் வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினரிடமே இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.







