கூச்சிங், அக். 27 - சரவாக், உலு செபுயாவ் (Ulu Sebuyau) பகுதியில் உள்ள சுங்கை பிளாய் (Sungai Plaie) ஆற்றில் நேற்று முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 14 வயது சிறுவனைத் தேடும் பணி இன்று மாலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நாளை மீண்டும் தொடரவுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் முகமட் நூர்சின் முகமட் ஒத்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில், ஆற்றங்கரையில் நின்றிருந்த ஒரு படகில் செம்பனை பழங்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆற்றில் இருந்த முதலை ஒன்று அவரை திடீரென தாக்கி இழுத்துச் சென்றதாக சரவாக் தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்தது.
இக்கொடூரச் சம்பவத்தை அந்தச் சிறுவனின் மாமா நேரில் கண்டுள்ளார்.
இன்று காலை 10:30 மணிக்குத் தொடங்கிய முதல் நாள் தேடுதல் பணியில், 4 படகுகளுடன் தொடர்புடைய அரசு அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் என மொத்தம் 40 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிறுவன் காணாமல் போன இடத்தில் இருந்து ஆற்றின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி நோக்கி முதலில் 2 கிலோமீட்டர் சுற்றளவிலும், பின்னர் 5 கிலோமீட்டர் சுற்றளவிலும் தேடுதல் வேட்டை விரிவுபடுத்தப்பட்டது.
எனினும், இன்று மாலை 4:30 மணி வரை சிறுவன் குறித்த எந்தத் தடயமும் கிடைக்காததால் தேடுதல் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்பணி நாளை காலை மீண்டும் தொடங்கும் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.






