தெலுக் இந்தான், டிச 3- பேராக், தெலுக் இந்தானில் உள்ள கம்போங் சுங்கை புவாயா என்ற தோட்டப் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தில்,முதலை தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப் பட்டவருக்கு அவரது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பேராக் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையின் (Perhilitan) இயக்குநர் யூசோஃப் ஷெரிஃப் (Yusoff Shariff) கூறுகையில், சம்பவம் குறித்த தகவல் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது என்றும், காயமடைந்தவர் தெலுக் இந்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து அருகில் இருந்த நீர்வழிகள் நிரம்பி வழிந்ததால் முதலை அப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போது, வனவிலங்குத் துறை அப்பகுதியை கண்காணித்து வருவதுடன், எச்சரிக்கை பலகைகளையும் வைத்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
பேராக் நதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் கிராமப் பகுதியில் உள்ள ஒரு வெள்ளக் கட்டுப்பாட்டு வாயில் வழியாக முதலை நுழைந்திருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


