புத்ராஜெயா, அக் 26: பாகான் லாலாங் கடற்கரைப் பகுதியில் முதலை காணப்பட்டதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அங்கு வரும் பார்வையாளர்கள் கடற்கரையோர நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை , கடற்கரையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அருகே முதலை போன்ற ஒரு விலங்கு நடமாடியதாக தங்களுக்குப் புகார் வந்ததாக செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.
"பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சுங்கை பீலெக்கில் உள்ள பாகான் லாலாங் கடற்கரையோரத்தில் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளது," என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலைக் கையாள்வதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் போலீஸ் சம்பந்தப்பட்ட பிற அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் என்றும் நோர்ஹிசாம் மேலும் கூறினார்.






