சிபு, செப். 11 - லாவாஸ், ஜாலான் கம்போங் சியாங்-சியாங் லாட் என்ற இடத்திலுள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றுப் பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த போது முதலையால் தாக்கப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் முதியவரின் தலை நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த முதியவரின் தலை அவர் காணாமல் போனதாக கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக சரவா மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் இரவு 11.20 மணிக்கு அழைப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து கட்டளை அதிகாரி அவாங் அதானி டாமிட் மற்றும் மூத்த செயல்பாட்டு அதிகாரி கிளாரன்ஸ் டி. பிரிமஸ் டியான்டன் தலைமையிலான குழுவினர் லாவாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நள்ளிரவு 12.45 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்ட தலை பாதிக்கப்பட்டவருடையது என்பது குடும்ப உறுப்பினர்களால் உறுதி செய்யப்பட்டது.
மேல் நடவடிக்கைகளுக்காக அந்த தலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்று காலை மீண்டும் தொடங்கியது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 80 வயதான துவா லாமாட் என்ற அந்த முதியவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றுப் பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
அந்த முதியவருடையது என்று நம்பப்படும் ஒரு துண்டு மற்றும் செருப்புகளை மட்டுமே குடும்ப உறுப்பினர்கள் அந்த இடத்தில் கண்டெடுத்தனர்.
முதலையால் தாக்கப்பட்ட முதியவரின் தலை கண்டுபிடிப்பு
11 செப்டெம்பர் 2025, 4:26 AM