ஷா ஆலாம், அக்.27 -சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வருவாய் கடந்த வாரம் வரை 280 கோடி ரிங்கிட்டை எட்டியது.
மாநிலத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்துவதற்காக, புதிய வருவாய் ஆதாரங்களுக்கான சாத்தியக்கூறுகளும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.
இன்று நடைபெற்ற 2027-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்ட தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகவலைப் பகிர்ந்துக் கொண்டார்.
மாநில அரசின் வருவாய் 280 கோடி ரிங்கிட் எட்டியதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்த அவர், மாநிலத்தின் ஒவ்வொரு நிதி ஒதுக்கீடும் முடிந்தவரை அதிகமான சிலாங்கூர் மக்களுக்குப் பயனளிப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும்,பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்கு மிக முக்கியமான செமிகண்டக்டர் தொழில்துறை மேம்பாடு மற்றும் வெள்ள நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்துவதில், கூட்டரசு அரசாங்கத்துடனான ஒத்துழைப்பிற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், வரும் நவம்பர் 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2027-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம், 'இரண்டாவது சிலாங்கூர் திட்ட' அமலாக்கத்தின் கீழ் திட்டமிடப்பட்டிருக்கும் முதல் வரவு செலவுத் திட்டமாகும்.
இந்த இரண்டாவது சிலாங்கூர் திட்டம், 6 முக்கிய நோக்கங்கள், 25 துறைகள் மற்றும் 98 திட்டங்களை உள்ளடக்கியிருக்கிறது.
இது சிலாங்கூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் திட்டமிடுவதற்கும் வழிநடத்துவதற்கும் ஒரு முக்கிய வழிகாட்டியாக அமையும் என்று அமீருடின் ஷாரி விளக்கினார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் திட்டமிடப்படும் முன்னேற்றங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, அதன் பலன்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் அரசாங்கம் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு 323 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியிருந்தது.







