கிள்ளான், அக் 25 - ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது வெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது பில்லியன் கணக்கிலான முதலீடுகளைக் கொண்டு மட்டும் அளவிடப்படக் கூடாது;
மாறாக அம்மாநிலத்தின் செல்வம் மக்களுக்கு எந்தளவுக்குப் பகிரப்படுகிறது என்பதைக் கொண்டே அளவிடப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான், சுல்தா ஷராபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறியுள்ளார்.
மக்கள் இன்னும் நிதி நெருக்கடியில் தவிக்கும் போது, அதிவேக வளர்ச்சியும் பொருளாதார செழிப்பும் அர்த்தமற்றதாகிவிடும் என்று அவர் வலியுறுத்தினார்.
மாநிலத்தின் செழிப்பு அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட சுல்தான், வளர்ந்த ஒரு மாநிலத்தின் பொருளாதார வெற்றியின் பலன்கள் ஏழைகளுக்கும், நலிவடைந்தோருக்கும் நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்றார்.
தமது ஆட்சியின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு இஸ்தானா ஆலாம் ஷாவில் நடைபெற்ற விழாவில் சுல்தான் உரையாற்றினார்.
அரசாங்கம் தனது அதிவேக வளர்ச்சிப் பாதையில் மக்களை மறந்துவிடவில்லை என்பதை உணர்த்தும் வகையில், தரமான கல்வி, மலிவு விலை வீடமைப்பு,பரந்த வேலைவாய்ப்புகள் மற்றும் தூய்மையான, ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றை மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, மாநிலத்தில் இஸ்லாம் மதத்தின் நிலையைப் பாதுகாப்பதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய சுல்தான், சிலாங்கூரின் பல்லின மக்கள் தொடர்ந்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.








