ஷா ஆலாம், அக் 24 - சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அம்மாநில மக்கள் தான் முக்கிய காரணமென, சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சிலாங்கூர் மாநிலம் வணிகம், கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் நாட்டின் முதன்மை மாநிலமாகத் திகழ்வதற்கு, அம்மாநிலத்தை தங்களது வசிப்பிடமாக அமைத்துக் கொண்ட மக்களே முதன்மைக் காரணம் என அவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
தமது 25 ஆண்டுகால ஆட்சி வெள்ளி விழா நிறைவை முன்னிட்டு வழங்கிய சிறப்பு நேர்காணலில் சுல்தான் இதனைத் தெரிவித்திருந்தார்.
கடந்த கால் நூற்றாண்டாக சுல்தானாகவும், அதற்கு முன்பாக 33 ஆண்டுகள் இளவரசராகவும் மக்களுக்கு பணியாற்றியதை தாம் பெரும் பாக்கியமாகக் கருதுவதாக அவர் கூறினார்.
பொருளாதார வளர்ச்சியைத் தாண்டி மக்களின் சுகதுக்கங்களில் பங்கெடுப்பதே தமக்குக் கிடைத்த மிக அர்த்தமுள்ள தருணங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிலாங்கூர் மாநிலத்தின் உண்மையான பலம் அதன் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், அனைத்து இனங்களையும் சேர்ந்த இளைஞர்களின் சாதனைகளிலும், சவாலான காலங்களில் மக்கள் காட்டும் ஒற்றுமையிலும் தான் அடங்கியுள்ளது என்று கூறினார்.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, ஜோகூர் மற்றும் பினாங்கு போன்ற பிற மாநிலங்களுக்கு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
எனினும், வெள்ளப் பெருக்கு மற்றும் துப்புரவு போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாதது தமக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருவதாக சுல்தான் சுட்டிக் காட்டினார்.
பொதுமக்கள் தமக்கு நேரடியாக அனுப்பும் புகார்களைத் தாம் மாநில மெந்திரி பெசாரின் அலுவலகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
எனவே, உண்மையான வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மட்டுமல்லாமல் சாதாரண குடிமக்களின் கண்ணியமான வாழ்விலும் அவர்களுக்குக் கிடைக்கும் நல்வாய்ப்புகளிலும் தான் பிரதிபலிக்க வேண்டும் என்றும் என்று குறிப்பிட்டார்.







