கிள்ளான், அக் 22 : கிள்ளான் ஆலாம் ஷா அரண்மனையில் நடைபெற்ற அரச தேநீர் விருந்தில், 1,500 ஆதரவற்ற மற்றும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கலந்துக் கொண்டனர்.
சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டு கால ஆட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த அரச தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விழாவில், சுல்தான் ஷராஃபுடின் இட்ரீஸ் ஷா அல் ஹாஜ், அரசியார் தெங்கு பெர்மாய்சூரி ஹாஜா நொராஷிகின், இளவரசர் தெங்கு அமீர் ஷா மற்றும் அவரது துணைவியார் டத்தின் படுகா ஸ்ரீ அஃப்சா ஃபதினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் சுல்தான் புரவலராகத் திகழும், சிலாங்கூர் - கூட்டரசு பிரதேச மூளை முடக்குவாத சிறார்கள் சங்கத்தைச் சேர்ந்த 60 மாற்றுத் திறனாளி சிறார்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு சுல்தான் பண அன்பளிப்பை வழங்கியதோடு, அங்கு வந்திருந்த விருந்தினர்களுடன் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், பாயா ஜாராஸ் ஆதரவற்ற சிறார்களின் பென்சாக் சிலாட் தற்காப்புக் கலை படைப்பும் , அரச மலேசிய போலீஸ் படையின் இசைக்குழுவின் படைப்பும் இவ்விழாவை மேலும் விமரிசையாக்கியது.
சிலாங்கூர் மாநில சுல்தானின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.









