போலி இணைய முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி RM87,975 இழந்த இல்லத்தரசி

19 அக்டோபர் 2026, 4:19 AM
போலி இணைய முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி RM87,975 இழந்த இல்லத்தரசி

கோலா திரங்கானு, அக். 19 – போலியான இணைய முதலீட்டுத் திட்டத்தை நம்பி, 63 வயது இல்லத்தரசி ஒருவர் RM87,975.04 பணத்தை இழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்றைக் கண்டுள்ளதாக கோலா திரங்கானு மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.

அந்த விளம்பரத்தில் ஈர்க்கப்பட்ட அவர், முதலீட்டுத் திட்டம் குறித்து கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக வாட்ஸ்அப் செயலி வழியாக ஆண் சந்தேக நபர் ஒருவரைத் தொடர்புகொண்டுள்ளார்.

அப்போது, RM450 முதலீடு செய்தால் RM25,000 லாபம் கிடைக்கும் எனக் கூறி, அந்தப் பெண்ணைச் சந்தேக நபர் முதலீட்டுத் திட்டத்தில் சேருமாறு வற்புறுத்தியதாக அஸ்லி தெரிவித்தார்.

அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், அப்பெண் தனது சேமிப்புப் பணத்தையும் நகைகளை அடகு வைத்துப் பெற்ற பணத்தையும் பயன்படுத்தி, அக்டோபர் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மொத்தம் ஒன்பது முறை பணம் செலுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் இழந்த மொத்தத் தொகை RM87,975.04 எனக் காவல் துறை தெரிவித்தது.

எனினும், முதலீடு செய்த ஆரம்பத் தொகையைத் திரும்பப் பெற முடியாததுடன், வாக்குறுதி அளிக்கப்பட்ட லாபமும் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என அந்தப் பெண் சந்தேகிக்கத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து, சந்தேக நபரைத் தொடர்புகொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இதனால், கோலா நெருஸ், வாகாஃப் தெம்புசு பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், நேற்று இரவு 7.58 மணிக்கு காவல் துறையில் புகார் அளித்ததாக அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.